கோவை மாவட்டத்தில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்க மறுக்கும் தனியார்
பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகளின்
பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து
வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைக்
காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு
வருகிறது. 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில்,
வழக்கம் போலவே நிகழாண்டிலும் கல்விக் கட்டணம் தொடர்பான புகார் மனுக்கள்
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரிடம்
பெற்றோர்களால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட புகார்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள
தனியார் பள்ளி மீது மணிகண்டன் என்பவரும், விளாங்குறிச்சி தனியார் பள்ளி
மீது ஜெகதீசன் என்பவரும் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,
பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், தனது மகளுக்கு தனியார் பள்ளி
நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்பதாகக் கூறி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடம்
வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறியது:
எனது மகள் நிகிதா ஸ்ரீ பொள்ளாச்சி நல்லப்பா வீதியில் உள்ள தனியார்
பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசு நிர்ணயித்த கல்விக்
கட்டணமான ரூ.7,700 மட்டுமே செலுத்த முடியும் என்று கூறினேன். ஆனால் பள்ளி
நிர்வாகம் முதல் தவணையாக ரூ. 23,000, 2-ஆவது மற்றும் 3-ஆவது தவணைகளில் தலா
ரூ. 4,500 வீதமும் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்புத்
தெரிவித்ததால் எனது மகளின் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு, வேறு
பள்ளியில் சேர்த்துவிடும்படி பள்ளி நிர்வாகிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இது குறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடம் புகார் தெரிவித்துள்ளேன்
என்றார்.
புகார் மனுக்கள் மீது நடவடிக்கை: இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கீதா கூறியது:
தனியார் பள்ளிகள் மீதான புகார்கள் குவிந்து வருகின்றன. கோவை நகரைக்
காட்டிலும் பொள்ளாச்சி பகுதியில் இருந்து கூடுதலான புகார்கள் வந்துள்ளன.
பெற்றோர்களின் புகார் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று
ஆய்வு நடத்து வருகிறோம்.
தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்
என்று அறிவுறுத்தி வருகிறோம். இதுவரை வந்த புகார்களுக்கு தீர்வு
காணப்பட்டுள்ளன. பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ள புகார்
மனு தொடர்பாக வரும் 22-ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரடி ஆய்வு
நடத்தப்படும் என்றார் அவர்.