தற்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள், 2005ல் வழங்கப்பட்டன; அதன் செல்லத்தக்க காலம், 2009ல் முடிந்தாலும், உள்தாள் ஒட்டப்பட்டு, ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு
வருகிறது. தற்போது ஓட்டப்பட்டுள்ள உள்தாள்கள், டிசம்பர் மாதம் வரை தான் செல்லுபடியாகும்.தமிழகத்தில், விழி, விரல் ரேகை; புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, 'ஆதார்' அடையாள அட்டையை, மத்திய அரசு வழங்கி வருகிறது.அதனால் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, மத்திய அரசிடம் இருந்து, 'ஆதார்' விவரங்களை பெற்று, 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க, உணவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.இத்திட்டத்திற்கு, ஒப்புதல் அளித்து, தமிழக அரசு, 2014, செப்., 16ல், அரசாணை வெளியிட்டது. ஸ்மார்ட் ரேஷன் கார்டு மென்பொருள் தயாரித்தல், செயல்படுத்துதல், பராமரித்தல், மேலாண்மை உட்பட, ஒருங்கிணைந்த பணிகளை, தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதில், ஆம்னி நிறுவனம் தேர்வான நிலையில், அந்நிறுவனத்திடம், 'ஸ்மார்ட்' கார்டு பணி, ஜனவரியில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு தேவையான மென்பொருளை உருவாக்க, சென்னை சேப்பாக்கம், எழிலக வளாகத்தில் உள்ள, ஒரு ரேஷன் கடையில், மக்களிடம் இருந்து விவரங்கள்
சேகரிக்கப்பட்டு வருகிறது.உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி, 318 கோடி ரூபாயில், மேற்கொள்ளப்பட உள்ளது. மென்பொருள் வடிவில் தயாரித்து, தனியார் நிறுவனமானது, உணவு துறை அதிகாரிகளிடம் வழங்கும். அதனடிப்படையில், 'ஸ்மார்ட்' கார்டு வடிவில், ரேஷன் கார்டு தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்திற்குள், சோதனை முறையில், ஒரு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்.அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழகம் முழுவதும், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.








