இந்திய-அமெரிக்க மாணவர்கள் பரிவர்த்தனைத் திட்டத்தன் கீழ் அமெரிக்காவில்
ஒரு மாதம் பயிற்சி பெற, மதுரைக் கல்லூரி மாணவியர் இருவர் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள மாணவர்களின்
திறமை, சமூகப் பொறுப்புணர்வு, தலைமைப் பண்பை மேம்படுத்தும் விதமாக
அமெரிக்காவில் உள்ள "கான்சாஸ்' பல்கலைக்கழகம் பயிற்சி அளித்து வருகிறது. இந்தியாவில்
இருந்து செல்லும் குழுவில், மதுரை பசுமலை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி
பிஏ (ஆங்கில இலக்கியம்) இரண்டாம் ஆண்டு மாணவி பா.அனிருத்தியா, டோக்
பெருமாட்டி கல்லூரி பிஎஸ்ஸி (சமூகவியல்) இரண்டாம் ஆண்டு மாணவி
என்.பாலசிதம்பரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு
அமெரிக்காவில் தலைமைப் பண்புப் பயிற்சி ஒரு மாதம் அளிக்கப்படும். இதற்கான
செலவை அமெரிக்காவில் உள்ள கல்வி-கலாசார மையம் ஏற்றுக் கொள்கிறது.
இதுகுறித்து
மாணவி பா.அனிருத்தியா கூறியதாவது: மாணவர் பரிவர்த்தனைத் திட்டத்தில்,
"கான்சாஸ்' பல்கலைக்கழகத்துடன் இணைந்து பெண்கள் தலைமைப் பண்பை வளர்க்கும்
பயிற்சியில் பங்கேற்க உள்ளேன். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த
சாதனைப் பெண்மணிகளுடன் வாஷிங்டனில் நடைபெறும் கருத்தரங்கிலும் பங்கேற்க
உள்ளேன் என்றார்.
மாணவி அனிருத்தியாவுக்கு, அமெரிக்க பல்கலைக்கழக
பயிற்சிக்கான அழைப்புக் கடிதம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை
நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் ராஜா கோவிந்தசாமி, செயலாளர் எம்.விஜயராகவன்,
ஆங்கில இலக்கியத் துறைத் தலைவர் அர்ஜுனன் உள்பட மாணவர்கள் கலந்து
கொண்டனர்.