பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி டெல்லியில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தை நேற்று
தொடங்கினர். இந்த போராட்டத்தில் மத்திய, மாநில மற்றும் டெல்லி மாநகராட்சியை
சேர்ந்த 20 அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புறநோயாளிகள் மற்றும் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்
பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனினும் அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல
இயங்கின.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கூறுகையில், உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவு வழங்க வேண்டும், பணியின் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும், தங்களுக்கு பணி நேரம் அறிவிக்க வேண்டும், குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர், மத்திய சுகாதார துறை மந்திரிக்கு கடிதம் எழுதினோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே காலவரையற்ற போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்







