பாரம்பரிய, இடைக்கால இலக்கியத்துக்கு அரும்பணிகள் ஆற்றியதை
கவுரவிக்கும் வகையில், தமிழகத்தை சேர்ந்த கே.மீனாட்சி சுந்தரத்துக்கு,
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சாகித்ய அகாடமி வெளியிட்ட அறிக்கை:
சாகித்ய
அகாடமியின், 2013ம் ஆண்டுக்கான, 'பாஷா சம்மான்' விருது, தென்னிந்தியாவின்
பாரம்பரிய, இடைக்கால இலக்கியம் தொடர்பாக அரும்பணிகள் ஆற்றிய கே.மீனாட்சி
சுந்தரத்துக்கு வழங்கப்படும். 2014ம் ஆண்டுக்கான, 'பாஷா சம்மான்' விருது,
கிழக்கிந்தியாவின் பாரம்பரிய, இடைக்கால இலக்கியம் தொடர்பாக அரும்பணிகள்
ஆற்றிய ஆச்சார்யா முனிஸ்வர் ஜாவுக்கு வழங்கப்படும்.சாகித்ய அகாடமியின்
அங்கீகாரம் பெறாத மொழியான, குமவுனியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சாரு சந்திர
பாண்டே, மதுராதத் மாத்பால் ஆகிய இருவரது பணிகளை, சாகித்ய அகாடமி
பாராட்டுகிறது.
சாகித்ய அகாடமியின் 'பாஷா சம்மான்' விருது, ஒரு
லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, பாராட்டு பத்திரம் கொண்டது. சாகித்ய அகாடமி
தலைவர், விருதுகளை வழங்குவார். இவ்வாறு சாகித்ய அகாடமி அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள,
மீனாட்சி சுந்தரம், 90, சிலப்பதிகாரத்தில் புலமை பெற்றவர்; இடைக்கால தமிழ்
இலக்கியம், திருக்குறள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.







