அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், விழுதுகள் என்ற அமைப்பு ஆண்டுதோறும் நிதியுதவிகளை வழங்கி வருகிறது.
தொழில் வளர்ச்சி, கல்வி, மருத்துவம், அடிப்படை வசதி என அனைத்திலும்
பின்தங்கிய மாவட்டமாக இருந்து வந்த ராமநாதபுரம் இந்த ஆண்டு கல்வியில்
முன்னணி வகித்த பல மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி முன்னிலை
படைத்திருக்கிறது. மாநில அளவில் 10மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில்
இம்முறை ராமநாதபுரம் மாவட்டம் 8-ம் இடம் பிடித்துள்ளது. 10-ம் வகுப்பு
தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டமும் இடம்
பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு
பள்ளிகளும் பல சாதனைகளை இந்த ஆண்டு படைத்திருக்கிறது. இவற்றில் ராமேஸ்வரம்
அரசு மேல்நிலைப் பள்ளியும் ஒன்று.
ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி 1955-ல் துவக்கப்பட்டது. ராமநாதபுரம்
மன்னர் சண்முகராஜேஸ்வர சேதுபதியால் தானமாக வழங்கப்பட்ட இடத்தில் தோன்றிய
இப்பள்ளி தனது 60 ஆண்டு விழாவை கடந்த ஜனவரி மாதம் கொண்டாடியது. இந்த 60
ஆண்டு கால வரலாற்றில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதன் முறையாக 100%
வெற்றியை பெற்றிருக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளாலும்
சாதிக்க முடியும் என நிகழ்த்தி காட்டியுள்ளது.
1985-86ம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இணைந்து ‘விழுதுகள்’ என்ற
அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் அரசு மேல்நிலைப்
பள்ளியில் படித்து ஒவ்வொரு ஆண்டும் பொது தேர்வில் சிறப்பிடம் பிடிக்கும்
மாணவர்களை ஊக்கப்படுத்த நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டது. இதற்கென நிரந்தர
வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில்
இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு நிதியுதவி வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த
மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா அன்மையில் ராமேஸ்வரம் அரசு
பள்ளியில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இந்த
விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் ‘‘மாணவர்களிடம் ஒரு கேள்வி. கடவுள்
இருக்கிறாரா? இல்லையா?. உங்களில் கடவுள் நம்பிக்கை எத்தனை பேருக்கு
உள்ளது’’ என கேட்டார். விழாவில் பங்கேற்ற பெரும்பகுதி மாணவர்கள் கடவுள்
நம்பிக்கை இருப்பதாக கைதூக்கினர்.
இதை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் ‘‘கடவுள் நம்பிக்கை மாணவர்களுக்கு
கட்டாயம் இருக்க வேண்டும். மாணவர்களின் கடவுள் அவர்களது ஆசிரியர்கள்தான்.
எதுவும் தெரியாமல் பள்ளிக்குள் நுழையும் நம்மை எல்லாம் தெரிந்தவர்களாக
மாற்றியமைக்கும் சக்தி படைத்த கடவுள்கள் நம் ஆசிரியர்கள். அவர்களை நாம்
என்றென்றும் மறக்க கூடாது. ராமேஸ்வரம் அரசு பள்ளியை பற்றி இதுவரை
வித்தியாசமான பார்வை இருந்து வந்தது. இன்றைக்கு அதனை உடைத்து காட்டி இன்று
மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரி பள்ளியாக எடுத்து
காட்டும் வகையில் இப்பள்ளி முன்னேறியிருக்கிறது. அதற்கு காரணமாக இருந்த
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்’’
என்றார்.
தொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்
களஞ்சிய ரூபன் (1065). அந்தோணி கிளிண்டன் (1052), கில்பர்ட் ராபின் (1030)
மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் முகேஷ்
(473), பிரவின்குமார் (469), கார்த்திக் (458) ஆகியோரு ஊக்க பரிசுகளை
வழங்கினார். மேலும் இந்த சாதனையை படைக்க உதவிய ஆசிரியர்களுக்கும் பரிசு
வழங்கி கௌரவித்தார்.
இந்த விழாவில் நகர்மன்ற உறுப்பினர் சே.சங்கர் வரவேற்புரை ஆற்ற பள்ளி தலைமை
ஆசிரியர் சேகர், முன்னாள் தலைமை ஆசிரியர் உமையணன் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர். ஆசிரியர் ஜெயகாந்தன் தொகுத்து வழங்க ரோட்டரி சங்க முன்னாள்
தலைவர் களஞ்சியம் நன்றி கூறினார். விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள்
உமாநாத், அப்துல்ஜபார், மோகன், தினகரன், பால்ராஜ், நாகேந்திரன் மற்றும்
முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி







