குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடைசி
நாள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)
அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள
அறிவிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர்
பணியிடங்கள்-19, காவல் துணை கண்காணிப்பாளர்கள்-26, உதவி வணிக வரி
அலுவலர்கள்-21, மாவட்ட பதிவாளர்கள்-8 என குரூப் 1 தொகுதியில் காலியாகவுள்ள
74 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது.
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள், தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)
விண்ணப்பிக்கலாம். 3 அல்லது 4 ஆண்டு பட்டப் படிப்புக்கான இறுதித் தேர்வு
எழுதி முடித்து காத்திருப்போரும் தேர்வை எழுதலாம்.
இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி கடைசி நாள்.
இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3
நிலைகளைக் கொண்டதாகும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறு
தேர்வுக்குச் செல்ல முடியும்.
துணை ஆட்சியர் பணிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகளில்
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோல துணை
காவல் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில
ஆண்டுகள் கழித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உயர்வு பெறலாம்.
முதல் நிலைத் தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வு
தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.







