குரூப்–2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பதவியில் அடங்கிய உதவி வணிக வரி அதிகாரி, சார்–பதிவாளர் கிரேடு–2, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லோக்கல் பண்ட் ஆடிட் டிபார்ட்மென்ட் உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர், வேளாண்மைத்துறை விற்பனை இளநிலை கண்காணிப்பாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 18 வகையான துறைகளில் காலியாக உள்ள 1,241 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.
பின்னர் சி.பாலசுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:–
முறைகேடுகளை தடுக்க வீடியோ பதிவு
குரூப்–2 பதவியில் அடங்கிய 1,241 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழகத்தில் 1,511 மையங்களில் நடந்தது. இதில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 200 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 64 ஆயிரத்து 309 பேர் 167 மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் 75 சதவீதம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தேர்வை கண்காணிக்க 2 ஆயிரத்து 94 தலைமை கண்காணிப்பாளர்களும், 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டனர். 282 பறக்கும் படையினரும், 327 மொபைல் பிரிவினரும் தேர்வை கண்காணித்தனர். முறைகேடுகளை தடுக்க ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதும் மையங்களில் வெப் கேமராவும், ஆயிரம் பேருக்கு குறைவாக தேர்வு எழுதும் மையங்களில் வீடியோ பதிவும் செய்யப்பட்டன. இதில் 1,800 பேர் ஈடுபட்டனர்.
மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் பணி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வாணையம் வரலாற்றிலேயே முதன் முறையாக 89 மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் அதாவது அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
குரூப்–1 தேர்வுக்கு கடந்த 24–ந்தேதி நிலவரப்படி 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் விண்ணப்பிக்க ஒரு மாதம் கால அவகாசம் உள்ளது. அதேபோல் நெடுஞ்சாலைத்துறையில் உள்ள உதவி–பொறியாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வார காலமாகி உள்ளது. மேலும் இதற்கான காலஅவகாசம் அடுத்த மாதம் வரை இருக்கிறது. அதற்கு பிறகே இதில் எவ்வளவு பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று தெரியவரும். இந்த தேர்வுக்கான அடிப்படை பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.








