நேர்முக தேர்வின் அடிப்படையில் உதவி பேராசிரியர் பதவியை நிரப்ப
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நேர்முக தேர்வு
சென்னை சிந்தாரிப்பேட்டையை சேர்ந்தவர் கே.சங்கீதா. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில், உதவி பேராசிரியராக கடந்த 9
ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில், புதுச்சேரி மத்திய
பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளை
நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதன்படி, உதவி
பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தேன். இதன்பின்னர் எனக்கு எந்த கடிதமும்
வரவில்லை. ஆனால் இந்த பதவிகளுக்கு கடந்த 17–ந் தேதி நேர்முகத் தேர்வினை
புதுச்சேரி பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது.
அழைப்பு இல்லை
என்னை விட தகுதி குறைவான நபர்கள் பலர் இந்த நேர்முகத் தேர்வில்
கலந்து கொண்டுள்ளனர். தகுதியிருந்தும் எனக்கு அழைப்பு கடிதம்
அனுப்பப்படவில்லை. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் செயல் அரசியல்
சட்டத்துக்கு எதிரானது.
எனவே, கடந்த 17–ந் தேதி நடந்த நேர்முகத்
தேர்வின் அடிப்படையில், உதவி பேராசிரியர் பணிக்கு யாரையும்
நியமிக்கக்கூடாது என்று இடைக்கால தடை விதிக்க வேண்டும். உதவி பேராசிரியர்
பதவிக்கு நான் செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்
பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
தடை
இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்து, நேர்முகத் தேர்வின்
அடிப்படையில் உதவி பேராசிரியர் பதவிக்கு ஆட்களை நியமிக்க புதுச்சேரி
பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.







