தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர இரண்டாம் கட்டக்
கலந்தாய்வின் தொடக்க நாளான புதன்கிழமை 80 மாணவர்களுக்கு சேர்க்கைக்
கடிதங்கள் வழங்கப்பட்டன.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர்
சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இரண்டாம் கட்டக்
கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இந்தக் கலந்தாய்வு தொடர்ந்து வரும்
சனிக்கிழமை (ஜூலை 25) வரை நடைபெற உள்ளது.
80 இடங்கள்: முதல் நாளில்,
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 4 மாணவர்கள்,
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.
இடங்களில் சேர 52 மாணவர்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்.
படிப்பில் சேர 15 மாணவர்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு
ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர 9 மாணவர்கள் என மொத்தம் 80 பேருக்கு
சேர்க்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டன என்று மருத்துவக் கல்வி தேர்வுக்
குழுவின் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
காலியிடங்கள்
எவ்வளவு? அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3 எம்.பி.பி.எஸ்.
காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 57 அரசு ஒதுக்கீட்டு
எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக்
கல்லூரியில் உள்ள 10 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக்
கல்லூரிகளின் 903 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப
தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.