எனவே, தரமான தலைக்கவச விற்பனையை உறுதி செய்ய, கட்டாயமாக ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற வேண்டிய பொருள்கள் பட்டியலில் தலைக்கவசத்தையும் இணைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதில் பாதுகாப்பு, அதிகபட்ச நுகர்வு, உடல்நலன் சார்ந்த பொருள்களான சிமெண்ட், மின் கம்பங்கள், பால்புட்டி, பால்பவுடர் உள்ளிட்ட 92 பொருள்களுக்கு தர நிர்ணயச் சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த 92 பொருள்களையும் இந்திய தர நிர்ணய அமைவனம் வழங்கும் ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பெற்றுத்தான் விற்க முடியும்.
ஆனால், ஐ.எஸ்.ஐ. முத்திரை கட்டாயமில்லாத பொருள்களுக்கு அப்படியில்லை. பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் தங்களுடைய பொருள் தரமானது என்று கூறி விற்க, தாமாக முன்வந்து ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, கட்டாய ஐ.எஸ்.ஐ. முத்திரைப் பட்டியலில் தலைக்கவசம் இல்லாததால், அதற்கு உற்பத்தியாளர்கள் முத்திரை பெற வேண்டிய கட்டாயமில்லை.
தட்டுப்பாடு, கூடுதல் விலை: தமிழகம் முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.
மேலும்,தலைக்கவசம் அணியாதவர்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தலைக்கவசம் வாங்கிய ரசீதைக் காட்டிய பிறகே அவர்களது வாகனத்தின் ஆவணங்களை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாத இறுதி முதல் ஜூலை முதல் வாரம் முழுவதும் தலைக்கவச விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் தலைக்கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதோடு, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
தனிநபரின் பொறுப்பு: செல்லிடப்பேசி, தலைக்கவசம் உள்ளிட்ட பொருள்களுக்கு ஐ.எஸ்.ஐ. சான்றிதழ் கட்டாயமாக்கப்படவில்லை. எனினும், அனைத்து அத்தியாவசியப் பொருள்களுக்கும் ஐ.எஸ்.ஐ. முத்திரை வழங்கி, அதைக் கண்காணிப்பது என்பது அரசால் இயலாத ஒன்று.
இருப்பினும், தற்போதைய பட்டியலில் கூடுதலாக சில பொருள்களை சேர்க்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
மேலும், சாலையோரக் கடைகளில் சிலர் தலைக்கவசம் வாங்க முற்படுகின்றனர். ஆனால், அவை அனைத்தும் தரமானவையா என்பதைக் கூற இயலாது. எனவே, அரசை மட்டுமே குறை கூறாமல், தங்களுக்கு பாதுகாப்பு தேவையெனில் சந்தையில் தரமான பொருள்கள் இருக்கும்போது அதைத் தேர்வு செய்து வாங்குவது நுகர்வோரின் கடமை என நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.
யார் மீது நடவடிக்கை?
தலைக்கவசத்துக்கான ஐ.எஸ்.ஐ. குறியீடு ஐந:4151 என்பதாகும். இது ஒவ்வொரு தலைக்கவசத்திலும் ஐ.எஸ்.ஐ. முத்திரைக்கு மேல் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுதவிர, ஐ.எஸ்.ஐ. முத்திரைக்குக் கீழ் இங/க-லலலலலலல (7 இலக்க உரிம எண்) குறிப்பிடப்பட்டிருக்கும்.
இவ்வாறு நுகர்வோர் கடைகளில் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் வாங்கிய தலைக்கவசத்தின் தரத்தில் குறைபாடுகள் இருப்பதாக அறிந்தால், அருகில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.க்ஷண்ள்.ர்ழ்ஞ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஐ.எஸ்.ஐ. முத்திரையைத் தவறாக பயன்படுத்துவோர் மீது ரூ. 50,000 வரை அபராதமும், 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் வழங்க சட்டம் உள்ளது.
ஆனால், கட்டாய பொருள்கள் தவிர்த்து, ஐ.எஸ்.ஐ. முத்திரையே இல்லாமல் விற்கப்படும் தலைக்கவசம் உள்ளிட்ட பொருள்கள் குறித்து நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. தலைக்கவசத்துக்கு கட்டாயமாக ஐ.எஸ்.ஐ. முத்திரையை இடம்பெறச்செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும் என இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இயக்குநர் டி.பி.நாராயணன் தெரிவித்தார்.
வாகனம் வாங்கும்போதே தலைக்கவசத்தையும் அளிக்க வேண்டும்!
மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129-இன் படி இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், மேலும் அந்த தலைக்கவசம் இந்திய தர நிர்ணய அமைவன (பி.ஐ.எஸ்.) விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவ்வாறு ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தரமான தலைக்கவசங்களை அணிவதை யார் கண்காணிப்பது என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இது தவிர, தலைக்கவசத்துக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை கட்டாயமில்லாததால், அதை உற்பத்தி செய்பவர்களையும், விற்பவர்களையும் சட்டபடி தண்டிக்க முடியாது.
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989, பிரிவு 138 (4) (எஃப்)-ன்படி இரு சக்கர வாகனத்தை தயாரிப்பவர்கள் வாகனத்தை விற்பனை செய்யும்போது தலைக்கவத்தையும் அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை. எனவே, இதுபோன்று சட்டத்தில் உள்ள குளறுபடிகளை போக்க தலைக்கவசம் குறித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும்கூட, சட்ட வல்லுநர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோருடன் மக்களின் நலன் கருதி அரசு கலந்தாலோசித்து முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் என வழக்குரைஞர் வி.எஸ்.சுரேஷ் தெரிவித்தார்.








