எனது மகன் சஞ்சய் கண்ணன் ஆலம்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 2014-15 ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தான். எனது மகன் சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி அவனை 10-ஆம் வகுப்புக்கு அனுப்ப பள்ளி நிர்வாகம் மறுத்தது. அவனை 10-ஆம் வகுப்பில் சேர்த்தால் பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சி கிடைக்காது என்றும் கூறினர். இந்நிலையில், அவனை நடப்பு கல்வியாண்டில் மீண்டும் 9-ஆம் வகுப்பிலேயே படிக்கவைத்தனர். எனது மகனுடன் சங்கரபாண்டி என்ற மாணவரையும் அவ்வாறு 9-ஆம் வகுப்பிலேயே மீண்டும் படிக்கவைத்தனர். மேலும், இருவரையும் வகுப்புக்குள் அனுமதிக்காமல் வகுப்புக்கு வெளியே தனியே அமரவைத்தனர். இது இருவரது மனதையும் பாதித்தது. இந்நிலையில், இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் மரணத்துக்கும் பள்ளியின் 100 சதவீத தேர்ச்சி ஆசைதான் காரணம். எனவே, இருவரின் இழப்புக்கும் உரிய இழப்பீடு வழங்கி சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
இம்மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், மதுரை ஆட்சியர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.








