அரசுக் கல்லூரி இடங்கள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்ட நிலையில், தனியார் கல்லூரிகளில் 2,104 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சேர்க்கை நடைபெறாமல் காலியாக உள்ளன.
பி.எஸ்.சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்றது.
இதில் அரசுக் கல்லூரிகளில் 555 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 6,621 என மொத்தம் 7,176 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வு தொடங்கிய ஒரு சில நாள்களில் அரசு இடங்கள் அனைத்தும் நிரம்பின.
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வந்தது. வியாழக்கிழமையுடன் கலந்தாய்வு நிறைவுபெற்றது.
முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 5,072 இடங்கள் பூர்த்தியாகி உள்ளன.
பி.எஸ்.சி.செவிலியர் 1,827, பி.பார்ம் 61, இயன்முறை மருத்துவம் 194, ஆக்குபேஷனல் தெரபி 22 என மொத்தம் 2,104 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் தனியார் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.
காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.








