அப்துல்கலாம்
கனவு காணுங்கள், முன்னேறுங்கள், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்றெல்லாம் லட்சிய உரை நிகழ்த்தி இளைஞர்கள், மற்றும் மாணவர்களை பெரிதும் ஈர்த்தவர் அப்துல்கலாம். திருமணம் செய்து கொள்ளாமல் கடைசிவரை நாட்டுக்காகவே உழைத்தார். விண்வெளி ஆராய்ச்சி சாதனையில் இந்தியாவை உலகளவில் உயர்த்தினார், எளிமையாக வாழ்ந்தார்.
சினிமா படமாகிறது
அவரது தன்னலமற்ற வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை இந்தி டைரக்டர் நிலாமதாப் பாண்டா டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே ‘ஐ ஆம் கலாம்’ என்ற இந்தி படத்தை எடுத்து பிரபலமானவர். ஏழை சிறுவன் அப்துல்கலாம் வாழ்க்கையை அறிந்து தானும் படித்து முன்னேற வேண்டும் என்று வைராக்கியம் கொள்வது போன்ற கதையம்சத்தில் அந்த படத்தை எடுத்து இருந்தார். இதற்கு நிறைய விருதுகள் கிடைத்தன.
தற்போது அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக்குகிறார். இதில் அப்துல்கலாம் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடக்கிறது. அப்துல்கலாம் கதாபாத்திரத்துக்கு அமிதாப்பச்சன் பொருத்தமாக இருப்பார் என்று அவர் கருதுகிறார். இதற்காக அமிதாப்பச்சனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதுகுறித்து டைரக்டர் நிலாமதாப் பாண்டா கூறும்போது அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப்பச்சன்தான் தகுதியானவர் எனவேதான் அவரை அணுகி உள்ளோம். படவேலைகளை தொடங்கி விட்டோம் என்றார்.








