அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் பிரிவு அளித்த புள்ளிவிவரத்தின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில், கணினி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளுக்காக 76,000 எச்-1 பி நுழைவு இசைவுகளை அமெரிக்கா வழங்கியது. அவற்றில், 86 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் சீனர்கள், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். எனினும், மொத்த இடங்களில் சீனாவைச் சேர்ந்த 5 சதவீதம் பேருக்கு மட்டுமே எச்-1 பி நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில், வேறு எந்த நாடும் ஒரு சதவீதத்தைக் கூட தாண்டவில்லை.
இயந்திரவியல், மின்சாரவியல், கட்டுமானவியல் உள்ளிட்ட பிற பொறியியல் பிரிவுகளைப் பொருத்தவரை 47 சதவீத இந்தியர்களுக்கு எச்-1 பி நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், சீனா 19.5 சதவீதத்துடன் 2-ஆவது இடத்தையும், கனடா 3.4 சதவீதத்துடன் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன என்று அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கே முன்னுரிமை: இந்திய வர்த்தகச் செயலருடன் விவாதிப்பதற்காக, தில்லி வந்துள்ள அமெரிக்க வர்த்தகச் செயலர் ஸ்டீஃபன் செலிக், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
அமெரிக்க அரசு வழங்கும் குறுகிய கால நுழைவு இசைவில் 65 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. உலகின் வேறு எந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவுக்கே அதிக எண்ணிகையிலான நுழைவு இசைவுகளை நாங்கள் வழங்கி வருகிறோம் என்று ஸ்டீஃபன் செலிக் தெரிவித்தார்.








