வருமான வரியை திரும்பப் பெறுவதற்கான தகுதியுடைய நபர்களுக்கு, 7 முதல் 10
நாள்களில் பணத்தை திருப்பி அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.செலுத்தப்பட்ட
வரியை திரும்பப் பெற தகுதியுடையோர் குறித்த விவரங்களை ஆதார் எண்
அடிப்படையிலான தொழில்நுட்ப உதவியுடன் விரைவாக சரிபார்க்கும் நடவடிக்கையை
வருமான வரித் துறை மேற்கொண்டது.
இந்தத் திட்டம் வெற்றி
பெற்றதையடுத்து, வரியை திரும்பப் பெறுவதற்கான தகுதியுடையோரின் வங்கிக்
கணக்குகளில் வெகு விரைவாக பணம் வரவு வைக்கப்படுகிறது.இதுகுறித்து, தில்லியில் வருமான வரித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முன்பெல்லாம் வருமான வரியாக செலுத்தப்பட்ட பணத்தை திரும்பப் பெற வேண்டுமென்றால் சில மாதங்கள் ஆகும்.
சில நேரங்களில் பல ஆண்டுகள்கூட தேவைப்படும். ஆனால், அந்த நடைமுறையெல்லாம் இப்போது காலம் கடந்துவிட்டது.
தற்போது, வரியைத் திரும்பப் பெறுவோர் குறித்த விவரங்களை மின்னணு முறையில் சரிபார்ப்பதற்கான திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, ஆதார் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களின் அடிப்படையில் சரிபார்ப்புப் பணி விரைவாக நடைபெறுகிறது. இதனால் 7 முதல் 10 நாள்களுக்குள் வருமான வரியை திரும்பப் பெற முடியும்.
அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, வரியைத் திரும்பப் பெற கோரிக்கை விடுத்திருந்த 45.18 லட்சம் பேரில் 22.14 லட்சம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் 32.95 லட்சம் பேரின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.







