வரைவு வாக்காளர் பட்டியல் 15–ந்தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வரைவு வாக்காளர் பட்டியல்
2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந்தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக்
கொண்டு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை
திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வருகிற
15–ந்தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில்
(பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) வரைவு
வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். elections.tn.gov.in என்ற
வலைதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். வாக்காளர்
பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும்.
5.68 கோடி வாக்காளர்கள்
15–ந்தேதி வெளியிடப்படவுள்ள சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்
வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5 கோடியே 68 லட்சம்
வாக்காளர்கள் உள்ளனர்.
16 மற்றும் 30 தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி
மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களில், வாக்காளர்
பட்டியலின் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள்
சரிபார்க்கப்படும்.
சிறப்பு முகாம்கள்
20.9.2015 மற்றும் 4.10.2015 ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில்
வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடம்மாற்றுதல் ஆகியவற்றுக்கான
படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே
சமர்ப்பிக்கலாம்.
இச்சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் மனுக்கள்
அளிக்கும் காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது
வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் மாற்றம் செய்யவோ
விரும்பும் ஒரு வாக்காளர் அல்லது தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 7, 8
மற்றும் 8ஏ ஆகியவற்றைப் பூர்த்திசெய்து அளிக்கலாம்.
elections.tn.gov.in/eregistration என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன்
முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வாக்காளர்கள்
1.1.2016 அன்று 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டில்
வாழும் இந்தியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட,
சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிக்கு படிவம் 6ஏ நேரிலோ, தபால் மூலமோ
அனுப்பலாம். படிவத்துடன் புகைப்படம், பாஸ்போர்ட்டின் விசா தொடர்புடைய
பக்கங்களின் நகலையும் சேர்த்து அளிக்கவேண்டும். தபாலில் அனுப்பும்போது
பாஸ்போர்ட்டின் நகல்கள் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி கூட்டம்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதையொட்டி அனைத்து கட்சி
கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
தலைமை தாங்கினார். அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க.
சார்பில் வக்கீல் ஆர்.கிரிராஜன், வக்கீல் பரந்தாமன், தே.தி.மு.க. சார்பில்
செந்தாமரைக்கண்ணன், காங்கிரஸ் சார்பில் தணிகாசலம், குமாரசாமி, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு சார்பில் பாக்கியரமணி, பாரதீய ஜனதா கட்சி சார்பில் ராகவன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.







