தமிழக சட்டப் பேரவை கடந்த மாதம் 24 ஆம் தேதி கூடியது. குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தேமுதிக இடத்தில் திமுக: இடைநீக்க உத்தரவு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக உறுப்பினர்களால் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அனைத்துத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களில் பங்கேற்றுப் பேசினர். ஆளும்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு முறை வெளியேற்றமும், 15 முறைக்கு மேல் வெளிநடப்பும் செய்தனர். அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கைகளிலும் பங்கேற்றதால், அவ்வப்போது அமைச்சர்களுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
மிக முக்கிய துறைகளான மின்சாரம்-மது விலக்கு, காவல் துறை ஆகியவற்றின் மீது பேசிய திமுக உறுப்பினர்கள் எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கரன் ஆகியோர் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றனர்.
சட்டப் பேரவை கூட்டத் தொடர், செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும், பொதுத்துறை, சட்டப் பேரவை, ஆளுநர்-அமைச்சரவை, நிதித் துறை, திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் ஆகிய துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.








