உயர் கல்வி நிறுவனங்களையும், மாணவர்களையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆஸ்ட்ரோசாட் மூலம் ஏராளமான தகவல்கள் புதிய ஆய்வுகளுக்காக இந்த நிறுவனங்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வழங்கப்படும். விண்வெளி ஆராய்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
இந்த "ஆஸ்ட்ரோசாட்' மூலம் பெறப்படும் தகவல்கள் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மங்கள்யானின் தகவல்கள்: மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவர 2.5 நாள்கள் ஆகின்றன. ஒரு முறை செவ்வாய் கிரகத்தைச் சுற்றும்போது 4 படங்கள் மட்டுமே எடுக்க முடிகிறது.
வேறு கருவிகளிலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதில் கலர் கேமரா அனுப்பியுள்ள தகவல்களில் சில புதிய தகவல்கள் வந்துள்ளன. ஆனால், ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும்தான் அவற்றை உறுதி செய்ய முடியும்.
மங்கள்யான் அனுப்பியுள்ள தகவல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அவர்களின் ஆய்வுகளுக்குப் பிறகு மங்கள்யான் புதிதாக எதையாவது கண்டுபிடித்துள்ளதா என்பது தெரிய வரும்.
இந்தியாவும், அமெரிக்காவும்...இப்போது இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து விண்வெளித் தொழில்நுட்பத்தில் பணிபுரிகின்றன.
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஒவ்வொரு விண்வெளி அமைப்புக்கும்
நிதிச் சிக்கல் உள்ளது. ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் விண்வெளித் துறையில் பயனுள்ள முறையில் செயல்படுவது சாத்தியமில்லை.
"சார்க்' செயற்கைக்கோள்: "சார்க்' செயற்கைக்கோளில் இலங்கைக்கு ஒதுக்கப்படும் அலைவரிசைக்கு அந்த நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல், பிற நாடுகளுடைய ஒப்புதலுக்காக இஸ்ரோ காத்திருக்கிறது.
இந்த ஒப்புதல்களையடுத்து அந்தச் செயற்கைக்கோளுக்கான மாதிரி உருவாக்கப்படும். இந்த செயற்கைக்கோள் 2 ஆயிரம் கிலோ எடையுள்ளதாக இருக்கும். இதில் 12 "டிரான்ஸ்பான்டர்'கள் இருக்கும். ஒவ்வொரு நாட்டினுள் தகவல் தொடர்புக்கு தலா ஒரு
"டிரான்ஸ்பான்டர்' வழங்கப்படும். மீதமுள்ள 4 "டிரான்ஸ்பான்டர்'களும் பேரிடர் மேலாண்மை, வானிலை ஆய்வு, தொலைநிலைக் கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டு இறுதியில் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என்றார் கிரண்குமார்.
"ஆரியபட்டா முதல் ஆஸ்ட்ரோசாட் வரை ஒரு பயணம்' என்கிற தலைப்பில் சி.டி.யையும் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வெளியிட்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவர் கே.சிவன், ஆன்டிரிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் வி.எஸ்.ஹெக்டே, பி.எஸ்.எல்.வி.-சி30 ராக்கெட் திட்ட இயக்குநர் ஜெயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாசாவின் "டெலஸ்கோப்'புடன் "ஆஸ்ட்ரோசாட்'டை ஒப்பிட முடியாது
நாசாவின் "ஹபுள் ஸ்பேஸ் டெலஸ்கோப்'புடன் இந்தியாவின் "ஆஸ்ட்ரோசாட்' செயற்கைக்கோளை ஒப்பிடமுடியாது என்று அந்த செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் கே.சூரியநாராயண சர்மா கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
"ஹபுள் டெலஸ்கோப்' அளவில் மிகப்பெரியது. அது குறிப்பிட்ட அலைவரிசையில் உள்ள கதிர்களை மட்டுமே ஆய்வு செய்யும். ஆனால், 1.5 டன் எடையுள்ள விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளில் இது சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, இதில் கண்களால் பார்க்கக் கூடிய கதிர்களிலிருந்து எக்ஸ்ரே கதிர்கள் வரை அனைத்தையும் ஆய்வு செய்ய முடியும். ஆஸ்ட்ரோசாட்டில் உள்ள ஸ்கேனிங் மானிட்டர் மூலம் திடீரென்று பிரகாசமாகத் தோன்றும் வானியல் நிகழ்வுகளையும் நாம் ஆராயலாம். எனவே, "ஹபுள் டெலஸ்கோப்'புக்கு "ஆஸ்ட்ரோசாட்' குறைந்ததல்ல. ஆனால், வித்தியாசமானது.
சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களை ஏவுகிறது இஸ்ரோ
அடுத்ததாக சிங்கப்பூர் நாட்டின் 6 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சி29 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளதாக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் குன்னி கிருஷ்ணன் கூறினார்.
பி.எஸ்.எல்.வி.-சி30 ராக்கெட்டின் வெற்றிக்குப் பிறகு பேசிய போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
பி.எஸ்.எல்.வி.-சி30 ராக்கெட் வெற்றியின் மூலம் தொடர்ந்து 30 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள் உலக விஞ்ஞான சமூகத்துக்கு இஸ்ரோவின் பரிசு.
அடுத்ததாக, "டெலியோஸ்-1' என்ற பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் உள்பட சிங்கப்பூர் நாட்டின் 6 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சி29 ராக்கெட் மூலம் ஏவப்படும்.








