பிரதமர் பேசுகிறார் ஆசிரியர் தினத்தையொட்டி, நாளை, 4ம் தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஏற்பாட்டில், பள்ளி மாணவ, மாணவியருடன், டில்லியில், பிரதமர் மோடி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்.அப்போது, இந்தியா முழுவதும், 10 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாநிலங்களில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பிரதமர் பேசுகிறார். நெல்லை மாணவி விசாலினியுடன், நாளை காலை, 11:00 மணிக்கு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், பிரதமர் பேசுகிறார்.
தாயார் பூரிப்பு!
மாணவியின் தாயார் சேதுராகமாலிகா கூறியதாவது: சிறுவயதில், விசாலினி பேச திணறினாள். டாக்டரிடம் அழைத்துச்சென்றபோது, விசாலினியின் அறிவுகூர்மை எனப்படும், 'ஐ.கியூ.,-225' என்ற அளவில் இருப்பதாக தெரிவித்தார். இது, வழக்கத்தை விட அதிகம்.
பள்ளியில் படிக்கும்போது, 'டபுள் புரமோஷன்' எனும் வகையில், இரண்டு வகுப்புகளை ஒரே ஆண்டில் கடந்து தேர்வானார். ஏழாம் வகுப்பில், 'கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங்' துறையில், பட்டதாரிகள் எழுதக்கூடிய பல வகை தேர்வுகளை, 'ஆன்லைனில்' எழுதி தேர்வு பெற்றார்.
டில்லியில் நடந்த, கூகுள் கல்வியாளர் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக விசாலினி பேசினார். 'கூகுளின் சுட்டிப் பேச்சாளர்' என பாராட்டப்பட்டார்.








