அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகங்கள் அளிப்பு:
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த
குழந்தைகளுக்கு தமிழக அரசின் குழந்தைகள் நல பரிசுப் பெட்டகங்களை ஆட்சியர்
வே.க. சண்முகம் வழங்கினார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்,
அதன் தாயும் பயனடையும் வகையில் "அம்மா' குழந்தை நல பரிசுப் பெட்டகத்
திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கள்கிழமை சென்னை தலைமைச்
செயலகத்தில் தொடக்கி வைத்தார்.
அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத் திட்டத்தின் கீழ்
வழங்கப்படும் இந்தப் பெட்டகத்தில், குழந்தையை பராமரிப்பதற்குத் தேவையான
துண்டு, உடை, படுக்கை, பாதுகாப்பு கொசுவலை, நாப்கின், எண்ணெய் டப்பா,
ஷாம்பூ, சோப்புப் பெட்டி, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான
கைகளுடன் குழந்தைகளை பராமரிக்க கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு
சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை
அதிகரிக்கவும் செளபாக்கியா சுண்டிலேகியம் என 16 பொருள்கள் உள்ளன.
இந்தத் திட்டத்தை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் வே.க. சண்முகம் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இந்த மருத்துவனையில் பிறந்த 71 குழந்தைகளுக்கு இந்தப்
பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் ஆரம்ப சுகாதார
மையத்தில் பிறந்த 13 குழந்தைகளுக்கும் பரிசும் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வி.
சோமசுந்தரம், வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் காஞ்சிபுரம்
பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்
மருத்துவர் கிருஷ்ணராஜ், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் தென்னேரி
வரதராஜுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.







