ஒரு வார விடுமுறைக்குப் பிறகு,
சட்டப்பேரவை திங்கள்கிழமை (செப். 14) மீண்டும் கூடுகிறது. பேரவைக் கூட்டத்
தொடர், செப்டம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 24-ஆம்
தேதி தொடங்கியது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதங்களும்,
வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பேரவைக் கூட்டத் தொடர் கடந்த
4-ஆம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டது. உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக ஒரு
வாரம் விடுமுறை விடப்பட்டு, மீண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி கூடும் என
பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்திருந்தார்.
மீண்டும் கூடுகிறது: இந்த நிலையில்,
சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை (செப். 14) மீண்டும்
கூடுகிறது. அன்றைய தினம், கேள்வி நேரத்துக்குப் பிறகு வருவாய்,
செய்தி-விளம்பரத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும்,
வாக்கெடுப்பும் நடைபெறுகின்றன.
மிக முக்கியத் துறையான காவல், தீயணைப்பு துறைகளின்
மானியக் கோரிக்கை மீதான மானியம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த
விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட
உள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதியுடன்
நிறைவடைகிறது.
கருணாநிதி விளக்கம் அளிப்பாரா?: திமுக
தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்து கடந்த வாரம்
விவாதிக்கப்பட்டது. கருணாநிதியிடம் இருந்து உரிய விளக்கத்தைப் பெற ஏழு
நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பேரவைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில்,
கருணாநிதி இதுவரை தனது விளக்கத்தைத் தெரிவிக்கவில்லை. ஓரிரு நாள்களுக்குள்
அவர் விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது. அவரது விளக்கத்தைத் தொடர்ந்து,
அவை உரிமை மீறல் குழுவின் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று
தெரிவித்தன.
அவை உரிமை மீறல் குழுவின் அறிக்கை, பேரவை மீண்டும்
கூடவுள்ள வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக
வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், பேரவைக் கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பாக
இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








