கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன்
வித்யாலயத்தில் நவம்பர் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மாநில அளவிலான
இளைஞர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநில அளவிலான இளைஞர் முகாம் வரும் நவம்பர் 26 முதல் 28 வரை நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 16 முதல் 30 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த முகாமில் பங்கேற்க அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
"இன்றைய
இளைஞர்களிடமிருந்து சமுதாயம் எதிர்நோக்குவது என்ன?', "சுவாமி
விவேகானந்தர்-உலக நாகரிகத்தின் வழிகாட்டி', "சமூக மாற்றத்துக்கான
இளைஞர்களின் ஆற்றல்', "சுவாமி விவேகானந்தரும், மனித மேன்மைக்கான
கல்வியும்', "இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்', "இளைஞர்களின்
தலைமைப் பண்புக்கான வெற்றி மந்திரங்கள்', "இந்தியப் பாரம்பரியத்தை ஆழமாகப்
புரிந்து கொள்ளுதல்', "பெண்ணுரிமையும் அவர்களது முன்னேற்றமும்',
"இளைஞர்களிடையே நல்ல பண்புகளை உருவாக்கலும் விழுமியக் கல்வியும்-தேவை',
"நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான நான்கு யோகங்கள்' ஆகிய 10 தலைப்புகளின்
கீழ் கலந்துரையாடல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை
நடத்தப்படும்.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர்,
கட்டுரையின் நகலை (தமிழ் அல்லது ஆங்கிலம்) நவம்பர் 10-ஆம் தேதிக்குள்
"ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன்பாளையம், கோவை-641 020' என்ற
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0422-2692676 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 99449 41427 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.