நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்குவதற்காகவே, 'ஆதார்' அடையாள அட்டை திட்டம், முந்தைய காங்., அரசால் அறிவிக்கப்பட்டது.
ஒன்றுக்கும் மேற்பட்ட...மேலும், ஒரே நபரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள், ஒவ்வொரு ஊரிலும் இருப்பதால், இதை, குடிமக்களின் முழுமையான அடையாள அட்டையாக கருத முடியாத நிலை உள்ளது.
ஆனால், ஆதார் அட்டையில், பெயர், முகவரி, புகைப்படம் ஆகியவை மட்டுமல்லாமல், ஒவ்வொரு நபரின் கைவிரல் மற்றும் கருவிழி ரேகைகள் பதிவு செய்யப்படுவதால், இதில், முறைகேடு களுக்கும், போலிகளுக்கும் அறவே வாய்ப்பு இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றதும், இந்த திட்டத்தை தொடரப் போவதாக அறிவித்தது. 'அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு, 'ஆதார்' அடையாள அட்டை கட்டாயம்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், 'பொது வினியோக திட்டம் மற்றும் சமையல், 'காஸ்' வினியோகம் ஆகிய திட்டங்களை தவிர, வேறு எதற்கும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கக் கூடாது' எனத் தெரிவித்தது.
இந்நிலையில், நாடு முழுவதும், 92 கோடி பேர், ஆதார் அடையாள அட்டை திட்டத்தில் தங்களை பதிவு செய்துள்ளதாகவும், இவர்களில், பெரும்பாலானோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டதாகவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயமாக்க...பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, 'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை ஆகிய வற்றை விட, ஆதார் அட்டை தான், அதிகமானோரிடம் தற்போது உள்ளதாகவும், ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகிஉள்ளது.
இதை, அடிப்படையாக வைத்தே, மேலும் சில திட்டங்களுக்கும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க அனுமதி அளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு சார்பில், மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாள அட்டைகளும் எண்ணிக்கையும்...
* நாடு முழுவதும், 5.7 கோடி பேரிடம் பாஸ்போர்ட்டுகள் உள்ளன
* வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' கார்டு, 17 கோடி பேரிடம் உள்ளது
* வாக்காளர் அடையாள அட்டை, 60 கோடி பேர் வைத்துள்ளனர்
* டிரைவிங் லைசென்ஸ், 17.3 கோடி பேரிடம் உள்ளது
* ஆதார் அடையாள அட்டை திட்டத்தில், 92 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 90 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு விட்டது ஆதாரால் கிடைத்த பயன்?
ஆதார் அடையாள அட்டை திட்டத்தால், அரசின் பல்வேறு நலத் திட்டங்களில் நடந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. அரசு கருவூலத்துக்கு, 2,600 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளது. சமையல், 'காஸ்' மானிய திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' வங்கி கணக்கு திட்டத்தின் கீழ், ஏழு கோடி பேரின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.
முதியோர், ஆதரவற்றோர், விதவை ஆகியோருக்கான உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டங்களையும், ஆதார் அடையாள அட்டை திட்டத்துடன் இணைத்து, செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.








