சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் சித்த மருத்துவம்
(பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேதம் (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி (பி.யு.எம்.எஸ்.),
யோகா- இயற்கை மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்.), ஹோமியோபதி (பி.எச்.எம்.எஸ்.)
ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 29 முதல் ஜூலை
24-ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை-அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக்
கல்லூரி, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி
மாவட்டத்தில் உள்ள கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி,
சென்னை-அரும்பாக்கம் யுனானி, யோகா- இந்திய மருத்துவக் கல்லூரி, மதுரை
மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி என மொத்தம் 6 அரசு
மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவை தவிர தனியார் நடத்தும் 5 சித்த
மருத்துவக் கல்லூரிகள், 3 ஆயுர்வேத கல்லூரிகள், 4 யோகா- இந்திய மருத்துவக்
கல்லூரி, 8 ஹோமியோபதி கல்லூரி ஆகிய சுயநிதிக் கல்லூரிகளில் அரசு
ஒதுக்கீட்டுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை சித்த
மருத்துவப் படிப்பு-150, ஆயுர்வேதம் -50, யுனானி- 20, யோகா, இயற்கை
மருத்துவம்- 60, ஹோமியோபதி- 50 என மொத்தம் 330 இடங்கள் உள்ளன. இவை தவிர
சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சுமார் 850 இடங்கள் உள்ளன.
மொத்தமுள்ள 1,180 இடங்களுக்கு 5,075 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களில் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 4,913 பேருக்கான
தகுதிப் பட்டியல் தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.








