அண்மைக்காலமாக, கருப்பு பண புழக்கத்தை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு
தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, குறிப்பிட்ட
தொகைக்கு மேல் பொருட்களை வாங்கினாலோ அல்லது செலவு செய்தாலோ பான் கணக்கு
எண்ணை சமர்பிக்க வேண்டும் என கட்டாய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கருப்பு பணம் பரிமாற்றம் நடைபெறுவதை தடுக்கவும், கருப்பு பண
புழக்கத்தை கண்டுபிடிக்கவும் பான் கணக்கு பரிமாற்ற பதிவுகளை அலசி ஆராயும்
புதிய சாப்ட்வேர் ஒன்றை வருமான வரித்துறைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது
மத்திய அரசு.
ஐ.டி.பி.ஏ-பான் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக இந்த சாப்ட்வேர்
உருவாக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை பிசினஸ் சாப்ட்வேர் அனலிஸ்டுகள்
வேகமாக செய்து வருகின்றனர். இந்த சாப்ட்வேர் கால அடிப்படையில் ஒருவரது பான்
விவரங்களை தெரியப்படுத்திவிடும். இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்த ஒரு
நபரானாலும் அவரது பான் விவரங்களை முழுமையாக வருமான வரித்துறையால் தீவிரமாக
கண்காணிக்க முடியும்.
இந்த சாப்ட்வேர் இம்மாத இறுதியில் மத்திய நிதி அமைச்சகத்தால் வருமான
வரித்துறை மற்றும் என்.எஸ்.டி.எல், யூ.டி.ஐ. நிறுவனங்களுக்கும்
வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி தற்போது பான் கார்டு பெற 15 நாட்கள் ஆகும்
நிலையில், இனி வெறும் 48 மணிநேரத்திற்குள் புதிய பான் கார்டை வழங்கவும்
மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்துகிறது.