ராமகுப்பம் அருகே அரசு பள்ளியில் குடிபோதையில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பிரம்பால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட ஆசிரியர் மீது மண்டல கல்வி அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
குடிபோதையில் ரகளை
ராமகுப்பம் மண்டலம் பைப்பரெட்லபள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அதில் ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் டுடேஷ்குமார் (வயது 40). இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பணிக்கு வந்தார்.
அதேபோல், மாணவ–மாணவிகளும் டுடேஷ்குமார் மீது தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். தகவல் அறிந்ததும் மாணவ–மாணவிகளின் பெற்றோரும் பள்ளிக்கு திரண்டு வந்து போதையில் இருந்த ஆசிரியர் டுடேஷ்குமாரை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், சக ஆசிரிய, ஆசிரியைகளையும், மாணவ–மாணவிகளையும் பிரம்பால் தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரியிடம் புகார்
இதுபற்றி பள்ளி ஆசிரியர்கள், ராமகுப்பம் மண்டல கல்வி அதிகாரி ராமச்சந்திரன், கிராம பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஷ் ஆகியோரிடமும் புகார் செய்தனர். 2 பேரும் பள்ளிக்கு விரைந்து வந்து குடிபோதையில் இருந்த ஆசிரியர் டுடேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், கல்வி அதிகாரி மற்றும் பஞ்சாயத்து தலைவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து டுடேஷ்குமாரை ஒரு மோட்டார் சைக்கிளில் வைத்து வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். குடிபோதையில் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கூடத்தில் ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு ஆசிரியர் டுடேஷ்குமார் குடிபோதையில் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் இருந்த மாணவ–மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியது தொடர்பாக ஏற்கனவே மாணவர்களின் பெற்றோர் சித்தூர் மாவட்ட கல்வி அதிகாரி சாமுலிடம் புகார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.








