கருணாநிதி
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, நல்ல வேளையாக மத்திய அரசின் மந்திரி, லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய காரணத்தால், அந்தப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
அழைத்துப்பேச வேண்டும்
கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து “ஜேக்டோ’’ அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில் இதுவரை 3 கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால் அரசுத் தரப்பில் “ஜேக்டோ’’ அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது அமைச்சர் உடனடியாக முயற்சிகளை மேற்கொண்டு, போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும்.
ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாத அ.தி.மு.க. அரசுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக பல வாரங்களுக்கு முன்பே ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. மாணவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தமிழக முதல்-அமைச்சரோ, கல்வி அமைச்சரோ ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப்பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும்.
ஆனால், அகம்பாவத்தின் உச்சத்தில் இருக்கும் தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. அதனால் ஆசிரியர்கள் திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
உண்மையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சத்துணவு ஊழியர்கள் பெயரளவில் பள்ளிகளை திறந்து வைத்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. வகுப்பறையில் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தெருக்களில் நின்று போராட வேண்டிய அவலம் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ‘‘ஜேக்டோ’’ அமைப்பு தயாராக இருக்கிறது. ஆனால் யாரிடம் பேசுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. இப்பிரச்சினையில் தீர்வுகாண உடனடியாக கவனம் செலுத்தவில்லை என்றால், 1996 தேர்தலில் எத்தகைய தோல்வியை ஜெயலலிதா சந்திததாரோ, அதற்கு சற்றும் குறையாத படுதோல்வியை 2016 தேர்தலில் சந்திப்பதிலிருந்து தப்ப முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








