தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாநில செயற்குழு கூட்டம்,
கடலுார் மாவட்டம், பிச்சாவரத்தில் நேற்று நடந்தது. சங்க பொதுச்செயலாளர்
மீனாட்சி சுந்தரம், நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபை தேர்தல்
நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தமிழக முதல்வர் காலம் கடத்தி
வருகிறார். இதனால் ஏமாற்றம் அடையப்போவது நாங்கள் அல்ல.தமிழகத்தில்,
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் என, 20 லட்சம் பேர்
உள்ளோம். குடும்பத்திற்கு, ஐந்து பேர் என்றால் கூட, ஒரு கோடி ஓட்டுகள்
எங்கு போகும் என, நான் சொல்ல வேண்டியதில்லை.இந்த அரசு பொறுப்பேற்ற
காலத்தில் இருந்து, 2 ஆண்டுகள் அமைதியாக இருந்தோம். எந்த அறிவிப்பும்
வராததால்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
தமிழகத்தில் புதிதாக தனியார்
பள்ளி துவங்க நகர்புறத்தில் 20 செண்ட், கிராம புறத்தில் 3 ஏக்கர் பரப்பில்
இடம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், கீற்று கொட்டகை இருந்தால்
தனியார் பள்ளி துவங்க அரசு அனுமதி அளித்து வருவது பெருத்த சந்தேகத்தை
ஏற்படுத்துகிறது. டாக்டர்களுக்கு இருப்பதுபோல், 'ஆசிரியர்களுக்கு உயிர்
பாதுகாப்பு சட்டம்' உள்ளிட்ட எங்களின் நியாயமான 15 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி, வரும் 8ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்ததில் 3.5 லட்சம்
பேர் பங்கேற்கின்றனர்.
அதன் பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்,
இம்மாத இறுதி அல்லது நவம்பர் மாதத்தில், தொடக்கப் பள்ளியில் இருந்து, பிளஸ்
2 வரை, அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த,
மாநில அளவில் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்போம்.இவ்வாறு, மீனாட்சிசுந்தரம்
கூறினார்.