தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும் வேளாண் பாடப்பிரிவு உள்ள
நிலையில், சென்னையில் மட்டும் வேளாண் பாடம் நடத்தவில்லை என, அரசு பள்ளி
ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், தொழிற்கல்விப் பாடங்கள்
நடத்தப்படுகின்றன. அதில், வேளாண் பாடம், சென்னையில் மட்டும் இதுவரை
துவங்கப்படவில்லை.சென்னை வருவாய் மாவட்டத்தில் உள்ள, நான்கு கல்வி
மாவட்டங்களிலும், 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும்
மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், மேல்நிலைப் பாடத்திட்டம் துவங்கி, 30
ஆண்டுகளை தாண்டிய பிறகும், வேளாண் பாடம் நடத்தவில்லை.இதுகுறித்து, வேளாண்
பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர், அக்ரி எம்.மாதவன் கூறியதாவது:
தமிழக
அரசு, பசுமைப் புரட்சிக்கு திட்டம் வகுத்துள்ள நிலையில், அதை செயல்படுத்த
வேண்டிய இளைய தலைமுறை மாணவர்களுக்கு, வேளாண்மை குறித்த விழிப்புணர்வு
இல்லை. குறிப்பாக, மாநிலத்தில் அதிக பள்ளிகளும், மாணவர்களும் உள்ள
சென்னையில், இந்த விழிப்புணர்வு அவசியமாகும்.
சென்னையில் பல இடங்களில்,
வீடுகளில் தோட்டம் வைக்கும் அளவுக்கு இடங்கள் உள்ளன; அடுக்கு மாடிகளில்
மாடித்தோட்டம் அமைக்கலாம். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய
வேளாண் படிப்பு, சென்னை பள்ளிகளில் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.