தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய காலத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தல்:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்போருக்கு உரிய
காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மத்திய தகவல் ஆணையத்தின் 10–ம் ஆண்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:–
3 அம்சங்கள் அவசியம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்கள் கேட்கும் தகவல்களுக்கு
குறித்த காலத்தில், வெளிப்படைத் தன்மையுடன், கேட்பவருக்கு எவ்வித
தொந்தரவும் ஏற்படாத வகையில் பதில் அளிக்கவேண்டும். இந்த 3 அம்சமும் மிக
முக்கியமானது. இதுபோல் தகவல்களை மக்கள் பெறுவது நிர்வாகத்தில் தவறு
நிகழ்வதற்கான வாய்ப்பை குறைக்க உதவும்.
தகவல்களை பெறவிரும்புவது
ஒருவருடைய உரிமை மட்டுமல்ல. அவர் கேள்வி எழுப்புவதற்கும் உள்ள உரிமையும்
ஆகும். இதனால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அதிகமாகும்.
அரசிடம்
கேள்விகளை எழுப்புவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. ஏனெனில் இதுதான்
ஜனநாயகத்தின் அடித்தளம். இந்த தகவல்கள் அனைத்தும் இணையதளம் மூலம்
சென்றடைந்தால் வெளிப்படைத்தன்மை தானாகவே அதிகமாகிவிடும். மேலும் மக்களிடம்
நம்பிக்கையும் அதிகரிக்கும்.
மாற்றங்களை கொண்டு வரலாம்
தகவல்களை
பெறுவதன் மூலம் அரசின் நிர்வாக முறையில் சாதகமான மாற்றங்களை கொண்டு வர
இயலும். அரசின் கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கும் இச்சட்டம் உதவி செய்யும்.
அரசின்
அனைத்து நிர்வாக பணிகளையும் இணையதளத்தில் மேற்கொள்ள மத்திய அரசு
‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில்
தகவல் அறியும் உரிமை சட்டமும் முழுவதுமாக இணைக்கப்படும். இதுபோல் தகவல்கள்
அனைத்தும், இணைய தளம் வாயிலாக நடக்கும்போது அது அரசின் நிர்வாக
செயல்பாடும் மிகுந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டதாக அமையும்.
மறைக்க எதுவுமில்லை
இந்த செயல்பாடுகள் அதிகமாக இணையத்தின் வாயிலாக நடந்தால் நிறைய
வெளிப்படைத்தன்மை ஏற்படும். ஏனென்றால் அரசு நிர்வாகப் பணிகளில் மறைப்பதற்கு
ரகசியங்கள் என்று எதுவும் இல்லை. அந்த காலமெல்லாம் எப்போதோ போய்விட்டது.
தகவல்
அறியும் உரிமை சட்டத்தை அரசு நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு
மட்டுமே பயன்படுத்தவேண்டும். குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்காக பதில் பெறுவது
என்னும் எல்லைக்குள் அது அமைந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
புறக்கணிப்பு
முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு பாதுகாப்பு காரணங்கள்
கருதி தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் சிலரை அதிகாரிகள் அனுமதிக்க
மறுத்துவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபல சமூக
ஆர்வலர் அருணா ராய் உள்ளிட்ட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொள்ளாமல்
புறக்கணித்தனர்.







