நாளை முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு: 10,000 மாணவர்களுக்கு அழைப்பு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க
விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை
(அக்டோபர் 4) தொடங்குகிறது.இந்தக் கலந்தாய்வில் மொத்தம் 67
எம்.பி.பி.எஸ்.இடங்கள், 8 அரசு பி.டி.எஸ். இடங்கள், மொத்தம் 143 அரசு
ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்பட உள்ளன.ஓமந்தூரார் அரசு
பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4),
திங்கள்கிழமை (அக்டோபர் 5) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக்
கலந்தாய்வில் பங்கேற்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு
அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற
உத்தரவின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய
ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்கள், மூன்று கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும்
மாணவர்கள் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் ஆகியவை இந்த
விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
இணையதளத்தில்
வெளியீடு: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 52
எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்
கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள 15
எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக்
கல்லூரியில் உள்ள 8 பிடிஎஸ் காலியிடங்கள், மதுரை பெஸ்ட் பல் மருத்துவக்
கல்லூரி சமர்ப்பித்துள்ள 33 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் உள்பட
மொத்தம் 143 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் காலியிடங்கள் ஆகியவை
விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று
மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் செயலர் டாக்டர் உஷா சதாசிவம்
தெரிவித்தார்.
÷ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து பிற மருத்துவக்
கல்லூரிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கான மறு ஒதுக்கீடும் இந்தக்
கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண்
அடிப்படையில் கலந்தாய்வு அட்டவணை சுகாதாரத் துறையின் இணையதளத்தில்
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.