தமிழகம் முழுவதும் குறைந்த விலையில் துவரம்பருப்பு
விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 15 டன் பருப்பு விற்பனை
ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் இந்தப் பருப்பை வாங்கிச் சென்றனர்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் துவரம் பருப்பின்
விலை ரூ.175 முதல் ரூ.220 வரையில் உயர்ந்தது. இவ்விலையைக்
கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து 5 ஆயிரம் டன்
இறக்குமதி செய்தது. அதில், தமிழக அரசு 500 டன் பருப்பை பெற்றுள்ளது.
இதை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு
துறை ஆகியவைகளால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடிகள் உள்பட 91 கடைகளில்
குறைந்த விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு பாக்கெட்களில் ரூ.110-க்கு
விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த
அங்காடிகளில் துவரம் பருப்பு விற்பனை தொடங்கியது.
இதில், சென்னை திருவல்லிக்கேணி, அசோக்நகர்,
கோடம்பாக்கம் ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த கூட்டுறவு
அங்காடிகளில் துவரம் பருப்பு வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவரும் தலா 1 கிலோ துவரம் பருப்பை வாங்கிச் சென்றனர்.
இதுதொடர்பாக அங்காடி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முதல்வர் உத்தரவுபடி 1 கிலோ ரூ.110-க்கு குறைந்த விலையில் விற்பனை
செய்வதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பே அரை கிலோ பாக்கெட்களாக துவரம்
பருப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் விற்பனை தொடங்கியதால்
பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். கூடுதலாக துவரம் பருப்பு வழங்க
வேண்டும் என்று பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 15 டன்
துவரம் பருப்பு விற்பனை ஆனதாகவும், சென்னையில் மட்டும் 5 டன் துவரம்
பருப்பு விற்பனையானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.







