சிறப்பு மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில்
இப்போது முதுநிலை சிறப்பு மருத்துவப் பட்டப் படிப்புகளில் இடஒதுக்கீடு
வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. அதில், இடஒதுக்கீட்டுச் சலுகை அளிக்கப்பட்ட போது, அந்தச்
சலுகை நடைமுறையில் இருப்பதற்கான காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
நாட்டின் நலன் கருதி வழங்கப்பட்ட இந்தச் சலுகையால்
சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொது நலன் கருதி,
சிறப்பு மருத்துவ பட்டப் படிப்புகளில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு
முறையை மாற்ற, மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்
தெரிவித்திருக்கிறார்கள். எனவே, தமிழக அரசு இந்தப் பிரச்னையில் உடனடியாக
கவனம் செலுத்தி, இடஒதுக்கீட்டு முறை, சிறப்பு மருத்துவப் படிப்புகளில் கால
வரையறையின்றி தொடருவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த
வேண்டும்.
திமுக ஆதரவு: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின்
ஒருங்கிணைப்புக் குழுவினர் என்னைச் சந்தித்து, காவிரிப் பிரச்னையில்
கர்நாடகத்தை மத்திய அரசு வலியுறுத்தக் கோரி வரும் 4 ஆம் தேதி சென்னையில்
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருப்பதாகத் தெரிவித்தனர்.
தமிழக விவசாயிகளின் நேர்மையான, முறையான அனைத்துப்
போராட்டங்களுக்கும் திமுகவின் ஆதரவு எப்போதும் உண்டு என அவர்களிடம்
உறுதியளித்து இருக்கிறேன் என்றார் கருணாநிதி.







