பார்வைத் திறன் குறைபாடுடையோர் அரசு வேலைவாய்ப்புகளைப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலர் எம்.விஜயகுமார் கூறினார்.
நேத்ரோதயா பார்வையற்றோர் அமைப்புக்கான 13-ஆவது ஆண்டு விழா சென்னை முகப்பேரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், விஜயகுமார் பேசியது:
காவல் உள்ளிட்ட 117 துறைகளில் பார்வைத் திறன்
குறைபாடுடையோருக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த வேலை வாய்ப்புகளை
பார்வையற்றோர் திறம்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டித்
தேர்வுகளுக்காக கடினமாக உழைக்க வேண்டும். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க
வேண்டும் என்றார்.
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
எஸ்.வைத்தியநாதன் பேசுகையில், கல்வி, வேலை வாய்ப்பு இவையே பார்வைத் திறன்
குறைபாடுடையோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளை சமுதாய அளவில் முன்னேற்றும்
என்றார்.
இதில், நேத்ரோதயா அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ கோவிந்த கிருஷ்ணன் பேசியது:
தமிழகத்தில் 1,27,405 பார்வையற்றோர் இருக்கின்றனர்.
இவர்களில் 70 ஆயிரம் பேர் கிராமப்புறங்களிலும் சுமார் 55 ஆயிரம் பேர்
நகர்ப்புறங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக
வழங்கப்படும் இடஒதுக்கீடை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நேத்ரோதயாவின் சார்பில் பட்டப்படிப்பை முடித்த பார்வைத் திறன்
குறைபாடுடையோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பி.எட் படிப்பு இலவசமாக
வழங்கப்பட்டு வருகிறது. இதில் 30 பேர் இலவசமாக தங்கிப் படிக்கலாம் என்றார்.
விழாவில், பார்வைத் திறன் குறைபாடுடைய 119 பேர் தொழில் தொடங்குவதற்கான பொருள்கள் வழங்கப்பட்டன.







