தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் ஆசிரியர் அடித்ததாக ஒன்றாம் வகுப்பு மாணவி
இடது கை தோள்பட்டையில் மூட்டு நழுவிய நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம்,
பூதலூர் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (35), பூ
வியாபாரி. இவரது மகள் தேவி (6) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்
ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்.தேவி இடது கை தோள்பட்டையில் மூட்டு நழுவிய நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மாரியம்மாள் வியாழக்கிழமை தெரிவித்தது:காய்ச்சல்
என்பதால் தேவி 2-ம் தேதி பள்ளிக்குச் செல்லவில்லை. மறுநாள் பள்ளி சென்ற
தேவியிடம் அப்பள்ளி ஆசிரியர், முதல் நாள் ஏன் வரவில்லை எனக் கூறி அவரது
கையைப் பிடித்து இழுத்து அடித்தார். தேவியின் தலையில் பென்சிலாலும்
கொட்டினார். இதனால், பள்ளியில் முழுவதும் தேவி அழுது கொண்டிருந்தார்.
வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியபோது அழுது கொண்டிருந்த
தேவியிடம் விசாரித்தபோது ஆசிரியர் அடித்ததாகவும், கை வலிப்பதாகவும்
கூறினார். பின்னர் மருந்து கொடுத்து தூங்க வைத்தேன்.
இதையடுத்து,
நவ.4-ம் தேதி காலை பள்ளிக்குப் புறப்பட்ட தேவிக்கு இடது கை தோள்பட்டையில்
வீக்கம் இருந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் அவரைச் சேர்த்தோம். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த
மருத்துவர்கள், தேவியின் இடது கை தோள்பட்டையில் மூட்டு நழுவியிருக்கிறது
என்று கூறினர் என்றார் மாரியம்மாள்.
இதுகுறித்து மாவட்டத் தொடக்கக்
கல்வி அலுவலர் ஜி.ரெங்கநாதன் கூறுகையில், இதுதொடர்பாக விசாரணை
நடத்தப்படுகிறது. பள்ளிக் கல்வி இயக்குநரின் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.