சமையல் எரிவாயு உருளை பெற இணையம் மூலம் பணம் செலுத்தும் வசதி விரைவில்
அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மதுரை பாரத் பெட்ரோலிய நிறுவன மேலாளர்
(எல்.பி.ஜி.) ஏ. ஜெபமாலை ராஜ் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், அவர் மேலும் கூறியது:சமையல்
எரிவாயு புதிய இணைப்பு விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் நடைமுறை
ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மறு உருளை
பெறுவதற்கான தொகையை இணையம் மூலம் செலுத்தும் வசதி சோதனை முறையில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் நாடு முழுவதும் விரிவாக்கம்
செய்யப்படும். இதன் மூலம், உருளைக்கான தொகை கூடுதலாகக் கேட்பது, உரிய
நேரத்துக்கு விநியோகம் செய்வதில்லை போன்ற புகார்கள் தீர்க்கப்படும்.
அனைத்து
விநியோகஸ்தர்களுக்கும் ஒரே மாதிரியான ரசீது தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அவை நுகர்வோருக்கும் வழங்கப்படுகிறது. உருளை பதிவு, விநியோகம் போன்றவை
எண்ணெய் நிறுவனங்களால் கண்காணிக்கப்படுகின்றன. ரசீதில் இருக்கும்
விவரங்களைப் படித்து தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற புகார் இருந்து
வருகிறது. இதைத் தீர்க்கும் வகையில், அந்தந்த மாநில மொழிகளில் ரசீது
வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விரைவில் ரசீது
தமிழில் வழங்கப்பட உள்ளது.
அதேபோல, பெட்ரோல் பங்குகளில் ரசீது
வழங்குவதில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ரசீது வழங்கினால் மட்டுமே
பெட்ரோல் நிரப்பும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பம்புகள் மதுரை
நகரில் மட்டும் 15 உள்ளன. இந்த முறையை அனைத்து பங்குகளிலும் கொண்டு
வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.