கன மழையால் பாதிக்கப்பட்ட, நான்கு மாவட்டங்களில், அபராதம் இன்றி மின்
கட்டணம் செலுத்த, நாளை கடைசி நாள் என்பதால், மின் கட்டண மையங்களில் மக்கள்
கூட்டம் நிரம்பி வழிகிறது.தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின்
பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த
வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன்
கட்டணத்தை செலுத்தியதும், மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்.சென்னை,
காஞ்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், கடந்த மாதம் பெய்த மழையால்,
ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், நான்கு மாவட்டங்களிலும்
டிச., 1 முதல், மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், ஜன., 31 வரை,
அபராதம் இன்றி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.
இன்று, ஞாயிற்று
கிழமை, மின் கட்டண மையங்களுக்கு விடுமுறை என்பதால், அபராதம் இன்றி செலுத்த,
நாளை அதாவது, பிப்., 1 மட்டும் அவகாசம் உள்ளது. அதனால், பலரும், மின்
கட்டணம் செலுத்தி வருவதால், மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கூடுதல்
அவகாசம் வழங்கியும், கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு
துண்டிக்கப்படாது; அபராதம் மட்டுமே வசூலிக்கப்படும். வீடுகளுக்கு சென்று,
கட்டணத்தை செலுத்தும்படி நினைவூட்டப்படும்.--எரிசக்தி துறை அதிகாரி