உலக அளவில் மனித இனத்துக்கு 26 சதவீத புரதமும், 13 சதவீத எரிசக்தியும் கால்நடைகளிலிருந்து கிடைக்கிறது. பெருகி வரும் வருவாய், நகரமயமாக்கலுக்கு ஏற்ப கால்நடை புரதத்துக்கான தேவை 2050-இல் 50 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இதற்காக வேளாண்மை உள்ளடக்கிய துறைகளில் கால்நடை துறை வேகமாக வளரக்கூடிய துறையாக இருக்கிறது. ஆனால், கால்நடைத் துறை வளர்ச்சிக்கு மிகுந்த நிபுணத்துவமும், தகுதியும் வாய்ந்த மனித ஆற்றல் தேவைப்படுகிறது.
மனித ஆற்றலை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய கால்நடை மருத்துவக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 60-லிருந்து 100-ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் இணைவேந்தரும், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான டி.கே.எம். சின்னையா, துணைவேந்தர் திலகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கால்நடை மருத்துவப் படிப்பில் 31 பதக்கங்களை பெற்ற மாணவி
விழாவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற, மாணவி சி.லாவண்யாவுக்கு 31 பதக்கங்கள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த இவர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஐந்தாண்டு இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பை (பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச்) படிப்பை மேற்கொண்டார்.
பட்டம் பெற்ற 203 பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். பட்டதாரிகளில் மிக அதிக பதக்கங்களை வென்ற முதல் மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சிறு வயது ஆசை நிறைவேறியுள்ளது. 5 வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையான தாய் ராதா கஷ்டப்பட்டு வளர்த்தார். எம்.பி.பி.எஸ். படிக்க வைப்பதுதான் ஆசையாக இருந்தது. இருப்பினும், கால்நடை மருத்துவப் படிப்பு என்ற லட்சியத்தை நிறைவேற்ற இதில் சேர்ந்தேன்.
அனேக பாடங்களில் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று 9 தங்கப் பதக்கம், 22 வெள்ளிப் பதக்கம், ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசு ஆகியவற்றை வென்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. பல்கலைக்கழக அளவில் முதல் 5 இடங்களில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, கால்நடை மருத்துவக் கல்லூரியிலேயே பணி வாய்ப்பு (பட்டதாரி உதவியாளர்) அளிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அரசுப் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.
அடுத்த ஆண்டு பகுதி நேர முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்து, ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வேன். கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றவே விரும்புகிறேன் என்றார்.
இவருக்கு அடுத்தபடியாக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கே. காயத்ரி 4 பதக்கங்களை பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார்.








