விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே மாணவிகள் மூவர் உயிரிழந்த
வழக்கில், கல்லூரி மாணவர்கள், கிராம மக்களிடம் சிபிசிஐடி போலீஸார்
வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.சின்னசேலம் அருகே பங்காரம் எஸ்விஎஸ்
இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து
சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரித் தாளாளர் வாசுகி,
அவரது கணவர் சுப்பிரமணியன், மகன் சுவாகர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி,
ஊழியர் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இதையடுத்து,
வாசுகி உள்ளிட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், அந்தக் கல்லூரியில் படித்து வந்த மாணவ, மாணவிகளை விழுப்புரம்
சிபிசிஐடி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை நேரில் வரவழைத்து எஸ்.பி. நாகஜோதி
தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, கல்லூரியில்
படித்து வந்த இதர மாணவ, மாணவிகளை வெள்ளிக்கிழமை வரவழைத்து விசாரணை
நடத்தினர். கல்லூரியின் செயல்பாடு, நிர்வாகத்தினரின் நடவடிக்கை, மாணவர்கள்
படிப்பைக் கைவிட்டுச் சென்றதற்கான காரணம், இறந்த மூன்று மாணவிகளின்
நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து அதை எழுத்துப் பூர்வமாகவும்
பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, அந்தக் கல்லூரி
மாணவிகள், கல்லூரி அமைந்துள்ள பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த சிலரை
வரவழைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.
இதனிடையே விசாரணையின்
போது, வாசுகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவரை,
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச்
சென்று வந்தனர்.
வழக்கு குறித்து எஸ்.பி. நாகஜோதியிடம் கேட்ட போது, விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.