14-ஆவது சட்டப் பேரவையின் 11-வது கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 20-இல் தொடங்கி, 23-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், பிப்ரவரி 16 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் பேரவை செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் திங்கள்கிழமை அறிவித்தார்.
அன்றே 2016-17-ஆம் ஆண்டு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாள்கள் நடக்கும்? அறிக்கை மீதான விவாதம் 17 முதல் 19-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடத்தப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
6-வது அறிக்கை தாக்கலாகிறது: 2011-ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. 2011-12-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை முதல் 2015-16-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை வரை 5 அறிக்கைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். ஆறாவது முறையாக இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.
தேர்தல் கூட்டணி குறித்து...: இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி-பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதிமுக அரசின் கடைசி கூட்டத் தொடர் என்பதால் பரபரப்பாகவும் இருக்கும் என்றும் தேர்தல் கூட்டணி குறித்த விவாதங்கள் அதிகளவு நடைபெறறும் வாய்ப்பு என்றும் சட்டப் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்தம் 187 நாள்கள்:
14-வது சட்டப் பேரவை மொத்தம் 187 நாள்கள் கூடியுள்ளது.








