மாற்றுத்திறனாளிகளின் நலன்
தமிழக சட்டசபையில், 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மேலும் சில சலுகைகள் கேட்டு அரசுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது சில சலுகைகளை அறிவிக்க விரும்புகிறேன்.
* தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு குறைபாட்டின் அளவு 60 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 40 சதவீதம் என குறைக்கப்படும்.
இதனால், 40 சதவீதம் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளும் ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித்தொகை பெற இயலும்.
உதவித்தொகை பெற நிபந்தனை நீக்கம்
* மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றோர் அதாவது ‘டெஸ்டிடியூட்’ என்ற நிலையில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. எவ்வித வருவாய் இல்லாதவராகவும், 50,000 ரூபாய்க்கு அதிகமான சொத்துகள் இல்லாதவராகவும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட மகன், மகனின் மகன் அதாவது பேரன், கணவர் அல்லது மனைவி இல்லாதவரே ஆதரவற்றோர் என வரையறுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும். அதாவது, வேலை வாய்ப்பற்ற 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ள, மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர்.
3 சதவீதம் இடஒதுக்கீடு
* மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். இந்த இடஒதுக்கீட்டை அரசு தவறாமல் கடைபிடித்து வருகிறது. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுவரை 5,633 மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள உயர்மட்ட குழு கண்காணித்து வருகிறது.
மாநில ஒருங்கிணைப்புக்குழு
* மாற்றுத்திறனாளிகளுக் கான பல்வேறு திட்டங்களை கண்காணிக்கவும், அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங் கவும் சமூக நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட மாநில ஒருங்கிணைப்புக்குழு ஒன்று அமைக்கப்படும்.
என்னால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் என நான் திடமாக நம்புகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.








