ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது:
புதுடில்லி:'ரிங்கிங்
பெல் நிறுவனத்தால், 251 ரூபாய் ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய முடியாது' என,
விமர்சனம் எழுந்துள்ள நிலையில், 'இதே விலையில் செலவு போக, போன் ஒன்றுக்கு,
31 ரூபாய் லாபம் ஈட்ட முடியும்' என, அந்த நிறுவனம் உறுதியாக
தெரிவித்துள்ளது.
'ரிங்கிங் பெல்' நிறுவனம், 'பிரீடம் 251' என்ற பெயரில், 251 ரூபாய்க்கு,
அதிரடியாக ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. அந்த நிறுவனத்தின்
இணையதளத்தில், இதற்காக, ஏழு கோடி பேர் முன்பதிவு செய்தனர்.
வருமான
வரி சோதனை, தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் குடைச்சல், உ.பி., அரசின் சந்தேகம்
என, அடுத்தடுத்து பல பிரச்னைகளை, அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.
'இந்த விலையில், ஸ்மார்ட் போனுக்கு வாய்ப்பில்லை' என, முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் புகார் தெரிவித்தன.
இந்நிலையில், அந்நிறுவன உரிமையாளரான மோஹித் கோயல் கூறியதாவது:
நான் என்ன தவறு செய்தேன்; என்னை ஏன் வேட்டையாடுகின்றனர்? பணம் இல்லாமல்
தொழில் செய்வதாகக் கூறுகின்றனர். என்னிடம் தெளிவான வியாபாரத் திட்டம்
உள்ளது. 'ஆன்லனில்' முன்பதிவு செய்த, 25 லட்சம் மொபைல் போன்கள்,
முதற்கட்டமாக ஜூன், 30க்குள், 'டெலிவரி' செய்யப்படும். நாங்கள்
உறுதியளித்தபடி அனைத்து வசதிகளும் அதில் இருக்கும்.ஒரு ஸ்மார்ட் போன்
விற்றால், அனைத்து செலவும் போக, எங்களுக்கு, 31 ரூபாய் லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.251க்கு எப்படி சாத்தியம்?
'ரிங்கிங்
பெல்' நிறுவனம், 251 ரூபாய்க்கு எப்படி ஸ்மார்ட் போனை வழங்க முடிகிறது
என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கு அந்நிறுவனமே அளித்துள்ள பதில்:
*இந்தவகை மொபைல் போன் தயாரிப்புக்கு, 1,500 ரூபாய் செலவாகிறது
* தைவானில் இருந்து உட்பொருள் இறக்குமதி; வெளிபாகம் வேறு ஒரு நிறுவனம் தயாரிக்கிறது
* 'அசெம்பிள்' எனப்படும் ஒன்றிணைப்பு வேலையை மட்டுமே, 'ரிங்கிங் பெல்' செய்கிறது
* தொழிலாளர்கள், இட வசதி, தயாரிப்பு கருவிகள் இல்லாததால், செலவு, 1,200 ரூபாயாகக் குறைகிறது
*இணையதளம் மூலம், பெருமளவு விற்பனை செய்வதால், கடை, ஷோரூம் செலவு குறைகிறது
* விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால், பெருமளவு பணம் மிச்சம்
*ஸ்மார்ட் போனில், மற்ற நிறுவனங்களின், 'ஆப்' இடம் பெறுவதால், அதற்கான தொகையை விற்பனை என்ற அடிப்படையில் பெறப்படும்
* இதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்
*விற்பனை விலையை, 251 ரூபாய் என்ற விலைக்குள் கட்டுப்படுத்த முடியும்
* செலவு போக, 'ரிங்கிங் பெல்'லுக்கு ஒரு போன் மூலம், 31 ரூபாய் லாபம் ஈட்ட முடியும்.