ஐ.ஐ.டி., உள்ளிட்ட தேசிய உயர் கல்வி நிறுவனங்களுக்கான,ஜே.இ.இ., போட்டி
தேர்வில், பிளஸ் 1 வகுப்பில் இருந்து, 40 சதவீதத்துக்கு மேலான வினாக்கள்
இடம் பெற்றன. தேசிய உயர் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., -
ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஒருங்கிணைந்த
நுழைவுத் தேர்வான, ஜே.இ.இ., தேர்வுகளை எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான
ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது; 10
லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
எளிமையான
தமிழகத்தில் இந்த தேர்வில், 7,000 பேர் பங்கேற்றனர். காலை, மாலை என,
இரண்டு வேளைகளில் இந்த தேர்வு நடந்தது. இதில், பி.இ., - பி.டெக்.,
படிப்புக்கானமுக்கிய தேர்வில், கடந்த ஆண்டை விட எளிமையான கேள்விகளே
இடம்பெற்றன. அதனால், இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என,
தெரிகிறது. தேர்வு குறித்து ஜே.இ.இ., பயிற்சி மையமான ஆகாஷ் இன்ஸ்டிடியூட்
சென்னை மண்டல உதவி இயக்குனர் ஜீன் ஜான் தாமஸ் கூறியதாவது: வினாத்தாள்
எளிமையாகவே இருந்தது. இயற்பியல் கேள்விகள் நீண்ட நேரம் யோசித்துபதில்
அளிக்கு வகையில் இருந்தது. ஆனால், கேள்விகள் எளிமை தான். அதேநேரம்,
வேதியியல் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தன. கணிதமும் எளிமையாக
இருந்தது. செய்முறை வினாக்கள், நான்கு இடம் பெற்றன. இந்த ஆண்டு, பிளஸ் 1
வகுப்பில் இருந்து அதிக வினாக்கள் இருந்தன. கணிதத்தில், 53; இயற்பியலில்,
43; வேதியியலில், 33 சதவீத வினாக்கள், பிளஸ் 1 வகுப்பில் இருந்து வந்தன.
தமிழக பாடத்திட்ட மாணவர்களும் இந்த ஆண்டு நல்ல மதிப்பெண் பெறும் வகையில்
தான், வினாத்தாள் இருந்தது.
சம அளவில் கட் ஆப் மதிப்பெண்ணை
பொறுத்தவரை, உயர் வகுப்பினருக்கு, 107 இருக்கும். பிளஸ் 2 மதிப்பெண்ணில்,
50 சதவீத, வெயிட்டேஜ் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்
கூறினார். தமிழகத்தில், பிளஸ் 1 பாடங்களையே பெரும்பாலான தனியார் பள்ளிகள்
நடத்தாத நிலையில், சி.பி.எஸ்.இ., நடத்திய போட்டி தேர்வில், பிளஸ் 1 பாட
வினாக்கள் சம அளவில் இடம் பெற்றுள்ளன. அதேபோல, பிளஸ் 2வில் மாணவர்களை
கண்ணீர் விட செய்த வேதியியல் பாடம், ஜே.இ.இ., தேர்விலும் மாணவர்களை
சோதித்தது.