தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகி உள்ளார் ஜெயலலிதா. இதற்கான பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார். மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 232 உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடரில் பதவியேற்கவுள்ளனர்.
சட்டப் பேரவையின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 3-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இது புதிய சட்டப் பேரவையின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ரோசய்யா உரையாற்றுவார். இதையடுத்து, நிகழ் நிதியாண்டுக்கான தமிழக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். துறை வாரியான செலவினங்களுக்கும் பேரவையின் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








