முதலாவதாக, பல கட்சி போட்டி இருப்பதால் வெறும் 30% மக்களின் ஆதரவைப்பெறும்
ஒரு கட்சி (வேறு எந்தக் கட்சிக்கும் 30%க்கு மேல் ஆதரவு கிடைத்திருக்காத
நிலையில்) ஆட்சிக்கு வந்துவிட முடிகிறது. இதனால், வெற்றி பெற்ற அந்தக்
கட்சிக்கு எதிராக விழுந்திருக்கும் 70 வாக்குகளுக்கு எந்த மதிப்பும்
இல்லாமல் போய்விடுகிறது.
மேலும் 28% பெற்ற ஒரு கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம்
கிடைக்காமல் போய்விடுகிறது. உண்மையில் ஒவ்வொரு கட்சிக்கும்
கிடைத்திருக்கும் வாக்குகளுக்கு ஏற்ப சட்டசபையில் இடங்கள் கிடைக்க
வேண்டும். அப்படி நடந்தால்தான் எல்லா கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம்
கிடைக்கும். அதுவே உண்மையான மக்களாட்சியாக இருக்கும். அதிலும் ஒரே கட்சியாக
இருக்காமல் கூட்டணியாகப் பல கட்சிகள் சேர்ந்து ஆட்சியப் பிடிப்பது அல்லது
தேர்தலுக்கு முன் எதிர்த்து நின்று போட்டியிட்ட கட்சிகள் தேர்தல் முடிந்த
பிறகு கூட்டணி அமைப்பது என படு கேவலமான சம்பவங்களும் நடந்து வருகின்றன. இது
உண்மையான மக்களாட்சி அல்ல.

அடுத்ததாக, அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசியல் விழிப்பு
உணர்வு இல்லாத மக்களிடம் மக்களாட்சி வழக்கியிருக்கிறது. முற்காலத்தில்
சொத்து வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று
இருந்திருக்கிறது. உயர் குடியில் பிறந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்
என்று இருந்திருக்கிறது. பெண்களுக்கு வாக்குரிமை 20-ம் நூற்றாண்டு
வரையிலும் கூட உலகில் பெரும்பாலான நாடுகளில் இருந்திருக்கவில்லை. அனைத்து
மக்களின் குரலுக்கும் இடம் கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கில்
வாக்களிக்கும் உரிமையை அனைவருக்கும் தந்திருப்பது சரிதான். ஆனால், இதில்
வேறொரு குறைபாடும் இருக்கிறது.
மக்களில் பெரும்பாலானவர்கள் உரிய அரசியல் விழிப்பு உணர்வு பெறாத நிலையில்
தவறானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது. தேர்தல்
நாளன்று அல்லது அதற்கு முன்னால் யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு
வாக்களிக்கும் மக்கள் உண்மையில் மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்குகிறார்கள்.
இப்படியானவர்கள் தம்மை மட்டுமல்லாமல் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க
விரும்பும் ஒருவரையும் சேர்த்தே பள்ளத்தில் விழ செய்கிறார்கள். இதைத்
தடுத்தாக வேண்டும்.
வாக்களிப்பவர்கள் அனைவருக்கும் அரசியல் விழிப்பு உணர்வு ஊட்டப்படவேண்டும்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அந்தந்த மாநிலத்தின் பிரதான பிரச்னைகள்
பத்தைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கட்சியும் அந்தப் பிரச்னைக்கு தமது
தீர்வைச் சொல்லவேண்டும். அதை அவர்கள் துண்டு பிரசுரமாக அச்சடித்துக்
கொடுக்கலாம்; அல்லது அவர்களுடைய கட்சி பிரமுகர்கள் அந்த பிரச்னை குறித்து
சுருக்கமாக பேசிய வீடியோவைப் போட்டுக்காட்டலாம். திரையரங்கில் அல்லது
திருமண மண்டபத்தில் பெரிய திரையில் இந்த வீடியோக்கள் வெளியிடப்படவேண்டும்.
வாக்களிக்க வரும் மக்கள் அதைப் பார்த்துவிட்டுத் தமது வாக்கைச்
செலுத்தவேண்டும். இப்போது அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள்,
தெருமுனைக்கூட்டங்கள், மாநாடுகள் எல்லாம் இதைத்தான் செய்கின்றன. ஆனால், இவை
நடந்த பிறகும் அதிக காசு அல்லது அதிக வாக்குறுதி தருபவருக்கே
வாக்களிக்கிறார்கள் என்பதால் வாக்களிக்கப் போவதற்கு முன்பாக கட்சிகளின்
நிலைப்பாடு மக்களுக்கு தெளிவாக நினைவுபடுத்தப்படவேண்டும். கூடவே காசுக்கு
அல்லது போலி வாக்குறுதிகளுக்கு மயங்கி வாக்களிப்பதால் வரும் இன்னல்களை
மிகத் தெளிவாக விரிவாக சமூக நல ஆர்வலர்கள் தேர்தல் மையத்தில் விளக்கமாகச்
சொல்லவேண்டும். வாக்களிக்கப் போவதற்கு முன்னால் குறைந்தது ஓரிரு மணி
நேரங்களாவது நாட்டு நடப்பு பற்றி மக்கள் சிந்தித்து அதன் பிறகு வாக்களிக்க
வேண்டும். இந்த வீடியோக்கள், புத்தகங்கள் இவற்றை பொது அரங்கில் தொடர்ந்து
கிடைக்கச் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் 300, 400 பேர் இந்த வீடியோக்களைப்
பார்க்க வசதி செய்ய வேண்டும். திரையரங்கக் காட்சிகளைப் போல் ஒரு வாக்குச்
சாவடியில் ஐந்தாறு காட்சிகளாக இவற்றைத் திரையிட்டு மக்கள் அனைவரையும்
பார்த்துவிட்டு வாக்களிக்கச் செய்யவேண்டும். இதன் இன்னொரு முக்கிய நோக்கம்
இன்று ஊடக, பண, அரசியல் பலம் இருக்கும் கட்சிகளின் செய்தி மட்டுமே மக்களைச்
சென்று சேர்கிறது. பிற கட்சிகளின் செய்திகள் மக்களைச் சென்று சேர்வதில்லை.
இது தடுக்கப்படவேண்டும்.
போட்டியிடும் அனைத்து கட்சிகளின் அனைத்துக் கொள்கைளும் மக்களுக்குத்
தெரிந்தாகவேண்டும். பக்கம் பக்கமான தேர்தல் அறிக்கைகளை மக்கள் படித்தாக
வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒவ்வொரு கட்சியும் தனது கொள்கைகளைச்
சுருக்கமாக ஐந்து நிமிடத்துக்குள் மக்களுக்குச் சொல்ல அடுத்ததாக தேர்தல்
என்பது கட்சி சார்ந்ததாக இருக்காமல் கொள்கை சார்ந்ததாக இருக்கவேண்டும்.
உதாரணமாக, ஒரு கட்சி சாராய விஷயத்தில் கடைகளைப் படிப்படியாக மூடவேண்டும்
என்று சொல்கிறது. ஆனால், அந்தக் கட்சி தாய் மொழிக் கல்விக்கு ஆதரவு
தரவில்லை என்று வைத்துக்கொள்வோம். வேறொரு கட்சி தாய் மொழிக் கல்வி தருவேன்.
ஆனால், சாராயக்கடைகளை மூடமாட்டேன் என்று சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
பெரும்பான்மையான மக்கள் சாராயக் கடையைப் படிப்படியாக மூடவேண்டும் என்றும்
தாய் மொழிக் கல்வி வேண்டும் என்று சொல்லியிருந்தால், புதிதாக அமையும் கட்சி
சாராய விஷயத்தில் கடைகளைப் படிப்படியாக மூடவேண்டும். தாய் மொழிக்
கல்வியைத் தரவேண்டும். அப்படியாக, வெற்றி பெறும் கட்சியின் கொள்கைகள்
அமல்படுத்தப்படும் என்பதாக இல்லாமல் மக்கள் கருத்து என்னவோ அதற்கு ஏற்ப
ஆட்சி நடத்தப்படவேண்டும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இரண்டு கட்சிகளுமே
ஒரே தீர்வைச் சொல்லியிருந்தால் யார் எதைத் திறம்பட நடைமுறைப்படுத்துவார்கள்
என்று மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு
வாக்களித்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக, இன்று தேர்தல் நாளில் அளிக்கும் ஒற்றை வாக்கானது அடுத்த ஐந்து
ஆண்டுகளுக்கு அந்த கட்சி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளும் அதிகாரத்தைத்
தருவதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கை என்ற ஒன்றைத்
தருகிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆட்சி செய்கிறார்கள் என்பது
உண்மைதான். என்றாலும் பல புதிய விஷயங்கள் தலை தூக்கும்போதோ பல முக்கிய
முடிவுகள் எடுக்கும்போதோ மக்களின் கருத்து என்ன என்பதைக் கேட்டுச்
செயல்படுத்த வழியில்லை. உதாரணமாக, ஈழப் பிரச்னையில் முள்ளிவாய்க்கால்
கொடூரம் நடந்தபோது ஆட்சியில் இருந்த கட்சியின் தலைவர் தனது அரசியல்
புரிதலுக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் ஏற்ப ஒரு முடிவை எடுத்துச்
செயல்பட்டார். உண்மையில் அந்த விஷயத்தில் அந்த நேரத்தில் மக்களின் கருத்து
என்ன என்பதை தெரியப்படுத்த இன்றைய மக்களாட்சியில் இடம் இல்லை. ஒருமுறை
வாக்களித்ததோடு குடிமகனின் கடமை முடிந்துவிடுகிறது. இது சரியல்ல.
முக்கியமான விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பொதுவாக்கெடுப்பு நடத்தியே
முடிவெடுக்கவேண்டும். மாதம் ஒரு முக்கிய முடிவெடுக்க வேண்டிவந்தால் மாதம்
ஒரு தேர்தல் நடத்த வேண்டும். இணையம், செல் போன் போன்றவை பெருகியிருக்கும்
நிலையில் கோடிகளைச் செலவழித்துத்தான் தேர்தல் நடத்தியாக வேண்டிய அடுத்ததாக,
இப்போதைய தேர்தல் வழிமுறையில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத கட்சிக்கு
தண்டனை என்பது ஐந்து வருட முடிவில் தரப்படுகிறது. இது சரியில்லை. ஊழலை
ஒழிப்பேன் என்று ஒரு அரசு வாக்கு கொடுக்கிறதென்றால் அது குறிப்பிட்ட
காலத்துக்குள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால் அல்லது அவர்கள்
எடுக்கும் நடவடிக்கைகள் மக்களுக்குத் திருப்திகரமாக இல்லையென்றால் உடனே
அந்தக் கட்சிக்கான ஆதரவைத் திரும்பப் பெறும் வாய்ப்பு இருக்கவேண்டும்.
இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்த பிறகுதான் வாக்களிக்க வேண்டும் என்று
உங்களைக் கேட்டுக்கொள்ளப் போவதில்லை. பிழையான மக்களாட்சியில் பங்கு
பெறுவதில் நீங்கள் காட்டும் ஆர்வத்தையும் வெகுளித்தனத்தையும் அதற்கான
உங்கள் தரப்பு அ-நியாயங்களையும் சமரசங்களையும் சாதுரியங்களையும்
புரிந்துகொள்ளமுடிகிறது. அதுபோலவே ஆரோக்கியமான மக்களாட்சியில் மட்டுமே
பங்கெடுக்கவேண்டும் என்பவருடைய நேர்மையையும் நீங்கள்
புரிந்துகொள்ளவேண்டும்.
மக்களால்...மக்களுக்காக...மக்களே ஆளும் ஆட்சியே மக்கள் மேல் அக்கறைகொண்ட
ஒருவரின் இலக்காக இருக்கவேண்டும். எனவே, உங்களுக்கு விருப்பம் எனில்,
கட்டாயம் வாக்களியுங்கள்; ஆனால், வாக்களிக்கும்படிக்
கட்டாயப்படுத்தாதீர்கள். வாக்களிப்பது மிகப் பெரிய ஜனநாயக உரிமைதான்.
ஆனால், பிழையான அமைப்புக்குத் துணைபோகாமல் இருப்பது ஜனநாயக தர்மம்.








