
மருத்துவக்கல்லுாரி சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை
தொடர்ந்து பெற்றோர்களின் படையெடுப்பினால் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஆரம்ப கல்வி முதல் பள்ளிக்கல்வி வரையில் மாநில கல்வி,
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என பல பிரிவாக இருந்தது. ஏழை
மற்றும் நடுத்தர மக்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
மாநிலக் கல்வி முறையிலும், வசதி படைத்தவர்கள் மெட்ரிக் உள்ளிட்ட பல்வேறு
பாடப் பிரிவுகளில் பயின்று வந்தனர்.
இவர்களில் மாநிலக் கல்வி முறையில் படித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில்
எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனையொட்டி பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளை மெட்ரிக் பிரிவில் சேர்க்க ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து கல்வி
வியாபாரமானது. ஒவ்வொரு பள்ளிகளும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணங்கள்
வசூலித்தன.
இந்த ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு கடந்த 2010ம் ஆண்டு தமிழக
அரசு ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வி முறையை
அறிமுகப்படுத்தியது. மேலும், பள்ளிகளின் கட்டமைப்பிற்கு ஏற்ப கட்டணங்களை
நிர்ணயம் செய்தது.
மெட்ரிக் கல்வி முறையில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பல லட்சம் ரூபாய் வருவாய்
ஈட்டி வந்த நிலையில், அரசின் அதிரடி நடவடிக்கையால் தங்கள் வருவாயில்
பெரும் இழப்பு ஏற்பட்டதையொட்டி, தமிழக அரசு தலையீடு இல்லாத வகையில் மத்திய
அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவு பள்ளிகளாக மாற்ற
முயற்சித்தனர்.
ஆனால், பெறறோர் மத்தியில் பெரிய அளவில் ஆதரவில்லாததால் அங்கொன்றும்,
இங்கொன்றுமாக சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்கப்பட்டன. இதில், பல மடங்கு
கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமச்சீர் பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள் அதிக
மதிப்பெண் பெற்றாலும், ஐ.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில்
உள்ள கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது
மிகமிக குறைவாகவே உள்ளது. மேலும், மருத்துவக்கல்லுாரி சேர்க்கைக்கு
நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தமிழகத்தில்
இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மத்திய அரசின் பாடத்திட்டமான
சி.பி.எஸ்.இ., பாடப் பிரிவுகளில் சேர்க்க ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
பெற்றோர்களின் மனநிலையை அறிந்த கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள்
இந்தாண்டு போட்டி போட்டுக் கொண்டு சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் திறந்து
வருகின்றனர். பலர், பழைய பள்ளியிலேயே சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவுகளுக்கு
மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்க தமிழக அரசிடம் தடையில்லா சான்று பெற்று மத்திய
அரசுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். மேலும், இப்பள்ளிகளில்
மாணவர்கள் 8 ம் வகுப்பு தேர்விற்கு செல்லும் போது அவசியம் மத்திய அரசின்
அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல
கல்வி நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ., பிரிவில் மாணவர்கள் சேர்த்து வருகின்றன.
இதன் காரணமாக கடந்தாண்டு வரை 12 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமே இருந்த
கடலுார் மாவட்டத்தில் இந்தாண்டு 24ஆக உயர்ந்துள்ளது. இதில் 16 பள்ளிகள்
மட்டுமே தமிழக அரசின் தடையில்லா சான்று பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு
வாரமாக மாவட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளின் சி.பி.எஸ்.இ., பாடப்
பிரிவில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இது தொடர்பாக மிகப் பெரிய அளவில்
விளம்பரங்களும் செய்யப்படுகிறது.
இதனால் எந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பது எனப் புரியாமல்
பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். புற்றீசலாக உருவாகி வரும் சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளை வரைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்
கல்வியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.