பேட்டி - கட்டுரைகள் -ஏழைகளுக்கும் எலைட் கல்வி! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பேட்டி - கட்டுரைகள் -ஏழைகளுக்கும் எலைட் கல்வி!

பேட்டி - கட்டுரைகள் -ஏழைகளுக்கும் எலைட் கல்வி!
ப்ளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகும்போது எல்லாம், ராமநாதபுரம் மாவட்டம் மட்டும் கொஞ்சம் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால், சமீபத்தில் வெளியான ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில், ஆனந்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ராமநாதபுரத்தின் அரசுப் பள்ளி மாணவர்களும் ஏராளமான மதிப்பெண்களை அள்ளியிருந்தனர். விசாரித்தால்... `நாங்கள் எல்லோருமே  எலைட் அரசு சிறப்புப் பள்ளியில் படித்தவர்கள்’ என்றனர்!

ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் நந்தகுமாரால் மூன்று வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது, இந்த எலைட் அரசு சிறப்புப் பள்ளி. கடந்த மூன்று வருடங்களாக தனியார் பள்ளிகளே திகைத்துப்பார்க்கும்படி, ப்ளஸ் டூ தேர்வில் பல சாதனைகள் செய்துவருகின்றனர் இந்தப் பள்ளி மாணவர்கள். இந்த ஆண்டு இந்தச் சிறப்புப் பள்ளியில் பயின்ற 68 மாணவர்களில், ஐந்து பேர் 1150 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 1110 மதிப்பெண்ணுக்கு மேல் 15 பேரும், 1000 மதிப்பெண்ணுக்கு மேல் 22 பேரும் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கே பெருமை சேர்த்துள்ளனர். இவர்களில் 11 மாணவ மாணவிகள் மருத்துவக் கல்வி தரவரிசையில் சேரும் தகுதி வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது அதிசயம். இந்தப் பள்ளியின் மாணவர்கள் எல்லோருமே எளிய பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்; பலர் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள்; ஆரம்பக் கல்வியில் இருந்தே அரசுப் பள்ளியில் படித்தவர்கள்.

எப்படி சாத்தியமானது இந்தச் சாதனை?

எலைட் பள்ளியின் இந்தச் சாதனைகளுக்குப் பின்னால் ராமநாதபுர மாவட்ட முன்னாள் ஆட்சியர் நந்தகுமாரின் உழைப்பு நிறையவே இருக்கிறது. அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ராமநாதபுர மாவட்ட கிராமப் புற, நகர்ப் புற அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள், ப்ளஸ் டூ-வில் குறைவான மார்க் பெறுவது ஏன் என்று ஆய்வில் இறங்கினார்.  தனியார் பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் மருத்துவம், இன்ஜினீயரிங்... போன்ற படிப்புகளைப் படிக்க  மெரிட்டில் செல்லும்போது, இவர்கள் மட்டும் ஏன் செல்வது இல்லை, இவர்களுக்கு என்ன  சிக்கல்... என்பதைக் கண்டறிந்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேல்நிலை வகுப்பில் முறையான பயிற்சி கிடைப்பது இல்லை என்பதை அறிந்து, உடனடியாக அதைச் சரிசெய்ய முடிவெடுத்தார்.
இதைப் பற்றி மாநிலத் திட்டக்குழுவில் முறையிட்ட நந்தகுமார், சமச்சீர் வளர்ச்சித் திட்ட நிதியில் இருந்து எலைட் பள்ளி அமைப்பதற்கான வேலைகளைத் தொடங்கினார். 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பமானது பள்ளி. மூன்று ஆண்டுகளுக்குள் இந்த மகத்தான சாதனை. இன்று மாவட்டத்தின் ஒவ்வோர் ஊரிலும் இப்படி ஒரு பள்ளி வேண்டும் என்று கேட்கிறார்கள்.  தங்கள் பிள்ளைகளை இந்த எலைட் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர் பெற்றோர்கள்.

``எலைட் சிறப்புப் பள்ளியின் இந்தச் சாதனை வெற்றிக்குக் காரணம், சமச்சீர் வளர்ச்சி என்ற திட்டத்தை உருவாக்கிய அரசு, ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகம், அர்ப்பணிப்பு உணர்வோடு இவர்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள்'' என்கிறார்கள் பெருமிதமாக.

இந்தப் பள்ளியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணனிடம் பேசினேன். ``தண்ணியில்லாத மாவட்டம், வறட்சி, வன்முறை, உயர் கல்வி பயிலாதவங்க அதிகம் உள்ள மாவட்டம்னு...

ராமநாதபுரம் மாவட்டம் மீது ஒரு நெகட்டிவ் இமேஜ் உருவாகிருச்சு. அதனாலேயே இங்கு அரசு ஊழியர்கள் இடம்மாறிவந்தால், உடனே திரும்பிப்போயிடுறாங்க. ஆனால் இந்த இமேஜ் என்பது  உண்மை இல்லை... இந்த மாவட்டத் திறமைசாலிகள் பலர் படிச்சு, பெரிய அரசுப் பதவிகளில் இருக்காங்க. இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு, ஏதோ ஒரு படிப்பைப் படிக்கப் போயிடுறாங்க.அதுவும் இல்லைன்னா ஏதாவது வேலைக்குப் போயிடுறாங்க. பொண்ணுங்க ப்ளஸ் டூ-ல மார்க் கம்மியா எடுத்துட்டா அதோடு படிப்பை நிறுத்திடுறாங்க. இதை எல்லாம் எப்படி மாத்துறதுனு யாருக்கும் தெரியலை. அப்பத்தான் தமிழக மாநிலத் திட்டக்குழுவில் இருந்து, சமச்சீர் வளர்ச்சி அடையாத மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கினாங்க. கலெக்டராக இருந்த நந்தகுமார் சார், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வி பெறும் வகையில் எலைட் பள்ளியை ஆரம்பிக்க அரசிடம் அனுமதி வாங்கினார்'' என்றார்.

இந்தப் பள்ளியைத் தொடங்கியதும், மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கிய மாணவர்கள் பட்டியல் எடுத்தனர். அவர்களின் பெற்றோர்களை அழைத்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதில், `உங்கள் பிள்ளைகள் ப்ளஸ் டூ-வில் நன்றாக மார்க் எடுத்து உங்களுக்கு எந்தச் செலவும் இல்லாமல் மருத்துவர், இன்ஜினீயர், பேராசிரியர், விஞ்ஞானி, ஆசிரியராக... ஆவதற்கு நாங்கள் பயிற்றுவிக்கிறோம். எங்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கிறோம்'' என்று கலெக்டர் கோரிக்கைவைத்தார். ஆனால், பெற்றோர்கள் பலருக்கு அதில் விருப்பம் இல்லை.  நாங்கள் ஊரிலயே படிக்கவைத்துக்கொள்கிறோம். பெண்குழந்தைகளை ஹாஸ்டலில் விட முடியாது என பலவிதமான காரணங்களைச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.

இருந்தும், 23 பெற்றோர்கள் மட்டும் இந்தப் பள்ளியின் மீது நம்பிக்கைவைத்து முதல் வருடம் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்த்தார்கள். நகராட்சி பெண்கள் பள்ளி வளாகத்துக்குள் புதிதாகக் கட்டப்பட்ட சிறப்புப் பள்ளிக்குள், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. சத்தான உணவுகள் தரப்பட்டன. மாற்றுவழிக் கற்றல், யோகா, உடற்பயிற்சி, பொதுஅறிவு... என பாடப் புத்தகத்துக்கு வெளியேயும் கற்றுத்தரும் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது இந்தச் சிறப்புப் பள்ளி.

``உங்களால் நேரடியாக எம்.பி.பி.எஸ், இன்ஜினீயரிங் படிக்கும் வகையில் மார்க் எடுக்க முடியும். உன்னால் பங்களா மாதிரி வீடு கட்ட முடியும். உன் பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல முடியும்... என்று மாணவர்களை உற்சாகப்படுத்திப் பேசுவோம். அதன் விளைவாக அந்தக் கல்வியாண்டில் ப்ளஸ் டூ-வில் எல்லோரும் நல்ல மதிப்பெண் எடுத்தனர். இன்ஜினீயரிங் கட்ஆஃப் மார்க் 199 எடுத்து சென்னை எம்.ஐ.டி-யில் ஒரு மாணவனும், கிண்டி சி.இ.ஜி-யில் ஒரு மாணவனும் சேர்ந்தனர். இருவரும் கூலித் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள். சாய் ஈசன் என்ற இலங்கை அகதி மாணவனுக்கு வி.ஐ.டி-யில் இடம் கிடைத்தது. அந்த பேட்ச்சில் எல்லோருமே நல்ல கல்லூரிகளில் சேர்ந்தார்கள். இதைப் பார்த்து அடுத்து வருடம் எண்ணிக்கை கூடியது. வெற்றிபெற்ற பழைய மாணவர்களைவைத்தே புதிய மாணவர்களிடம் பேசச் சொன்னோம். சந்தேகங்களைத் தீர்க்கச் சொன்னோம்; அது அவர்களுக்கு உத்வேகம் கொடுத்தது. அடுத்து வந்த மாவட்ட ஆட்சியர் நடராஜனும் இந்தச் சிறப்புப் பள்ளியின் மீது மிகுந்த அக்கறை காட்டினார். அடிக்கடி பள்ளிக்கு விசிட் செய்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இப்போது தனியார் பள்ளிகளில் இருந்தும் அட்மிஷனுக்கு வருகிறார்கள். இது முழுக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமான பள்ளி என்பதில் உறுதியாக இருக்கிறோம். அரசுப் பள்ளி ஆசிரியராக எங்களுக்கு இதுதான் மகிழ்ச்சி. சாமானியர் வீட்டுப் பிள்ளைகளை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’’ என்கிறார் நவநீதகிருஷ்ணன்.

எல்லோருக்கும் மிகவும் உற்சாகத்துடன் கேக் கொடுத்துக்கொண்டிருந்தார் ப்ளஸ் டூ-வில் 1161 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நஸ்ரின்... ``நான் மண்டபம் அரசுப் பள்ளியில 10-ம் வகுப்புல 478 வாங்கினேன். எங்க அப்பா ஊர்ல கடை வெச்சிருக்காரு. அப்பத்தான் எலைட் பள்ளி பற்றி சொன்னாங்க. இங்கே தங்கிப் படிக்கிறது சரியா வருமானு என் அப்பாவுக்குத் தயக்கம் இருந்தது. ஆனால், இங்கே படிச்சாத்தான் நாம நினைச்சதைச் சாதிக்கலாம்னு எனக்குத் தோணுச்சு. அதன்படி நம்பிப் படிச்சேன். எங்களுக்கு எந்தச் செலவும் இல்லை. இப்ப நான் எம்.பி.பி.எஸ் பண்ணப்போறேன்’’ என்கிறார்.

``எனக்கு திருவாடானை பக்கம் தினையத்தூர் சொந்த ஊர். அப்பா விவசாயி. டென்த்ல 455 மதிப்பெண்கள் வாங்கினேன். எலைட் பள்ளியில் சேர்ந்து படிச்சதுல ப்ளஸ் டூ-வில் 1115 மதிப்பெண்கள் வாங்கியிருக்கேன். நான் இவ்ளோ மதிப்பெண் வாங்குவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை’’ என்கிறார் பவித்ரா.

 மாணவன் பார்த்திபனின் தந்தை மணியாரன், ஆசிரியர்களுக்கு இனிப்புகள் கொடுத்துக் கொண்டிருந்தார்... ``எனக்கு பரமக்குடி பக்கம் செவ்வூர்தான் சொந்த ஊர். நான் ஒரு விவசாயி. காசு கொடுத்து எங்களால புள்ளைகளை காலேஜுல சேர்க்க முடியாது. இப்ப இங்க படிச்சதால, என் பையன் 1056 மார்க் வாங்கிருக்கான். இதுமாதிரி எல்லா கவர்மென்ட் பள்ளிகளும் செயல்பட்டால் ஏழைப்புள்ளைங்க நல்லா வருவாங்க’’ என்றார்.

ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் அவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்.  ``அரசுப் பள்ளி மாணவர்களை உயர் கல்விக்குத் தகுதியானவர் களாகக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, தமிழக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டமே எலைட் பள்ளி. இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இது ஒரு முன்மாதிரிப் பள்ளியாக மாறியுள்ளது. இதற்கு தமிழக அரசின் திட்டக் குழுவும், கல்வித் துறை, இங்கு உள்ள ஆசிரியர்களும்தான் காரணம். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் நாங்கள் நான்காவது இடத்துக்கு வந்துவிட்டோம்’’ என்கிறார் மிகவும் மகிழ்ச்சியாக.

எல்.கே.ஜி-க்குக்கூட கூச்சமே இல்லாமல் லட்சங்களில் நன்கொடை கேட்டு கொள்ளை அடிக்கிற காலகட்டத்தில் வாழ்கிறோம். இப்படி ஒரு மோசமான நிலையில் இந்த எலைட் அரசுப் பள்ளி நம்பிக்கை விதைக்கிறது. அரசுப் பள்ளிகள் அனைத்துமே இப்படி மாறவேண்டும். அதுதான் தனியார் பள்ளிகளின் பணக் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H