பிஇ, எம்பிபிஎஸ் எந்த மதிப்பெண்களுக்கு இடம் கிடைக்கும்?
-பொன். தனசேகரன்

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில்
மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைப் பார்க்கும் போது எம்பிபிஎஸ் படிப்பில்
மாணவர்களைச் சேர்ப்பதற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட ஒரு
மார்க் குறைவாக இருக்கலாம் என்ற யூகிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொறியியல்
படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் ஒரு
மார்க்கிலிருந்து 1.5 மார்க் வரை குறையலாம் என்றும் நிபுணர்களால்
உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் பொது
நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா? இல்லையா? என்ற சர்ச்சையில் சிக்கித்
தவித்திருந்த தமிழக மாணவர்களுக்கு ஒரு வழியாக தற்போது விடிவு
கிடைத்துள்ளது.இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு பொது
நுழைவுத் தேர்வு எதையும் எழுத வேண்டியதில்லை. பிளஸ் டூ மதிப்பெண்களின்
அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற செய்தியால் மாணவர்கள்
சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
எனினும், நாம் எடுத்துள்ள
மதிப்பெண்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம்
கிடைக்குமா என்ற கேள்வி பல மாணவர்களது மனதில் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டில் அரசு மருத்துவக்
கல்லூரிகளில் பொதுப்பிரிவின் கீழ் 198.00 கட் ஆஃப் மதிப்பெண்கள் வரை
எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது. மற்ற பிரிவினருக்கான கட் ஆஃப்
மதிப்பெண்கள்: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 197.25, பிற்படுத்தப்பட்டோர்
(முஸ்லிம்கள்) - 196.00, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 194.75,
தாழ்த்தப்பட்டோர் - 191.50, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் - 190.50,
பழங்குடியினர் - 185.75.