நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு.
இன்றோ காணக்கிடைக்காத அரிய தானியமாக மாறிவிட்டது.
கேழ்வரகிலுள்ள சத்துக்கள் என்னென்ன என்பதைக் கூறி, கேழ்வரகு சாப்பிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது இந்த பதிவு!
: கேப்பை, கேழ்வரகு, நச்சினி, மண்டுவா என பல பெயர்களால் விளிக்கப்படும் ராகியில் எந்த தானியத்தை விடவும் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு.
இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது.
தமிழ் நிலத்தோடும், கலாச்சாரத்தோடும் மிக நெருங்கிய நீண்ட காலத் தொடர்புடையது கேழ்வரகு!
கேப்பைக் களி கிண்டாத சமையலறையோ, கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களோ நம் பாரம்பரியத்தில் இருந்ததில்லை.
பெரும்பான்மை மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் இயற்கைகொடுத்த இன்சூரன்ஸ்!
சர்க்கரை, கொலஸ்டிரால், BP, இருதயம், கேன்சர் என பல லைஃஇவ்வகைப் ஸ்டைல் நோய்களால் விரட்டப்படும் ‘நியு ஏஜ்’ இந்தியனுக்கு சிறுதானியங்களின் தேவை இரு மடங்காகி இருக்கிறது.
ஏனெனில், அரிசிமணி பெரும்பாலும் பாலிஷ் செய்யப்பட்டு ஒரு சர்க்கரை சக்கையாகவே கிடைக்கிறது.
ஆனால், அளவில் சிறிய இந்த சிறுதானியங்களை பாலிஷ் செய்வது கடினம்,
அதனால் இவற்றின் ஊட்டச்சத்து பாதுகாக்கப்படுகிறது.
மேலும், பூச்சிக் கொல்லிகளின் தேவை இவற்றிற்கு இல்லை
ஆதலால், கெமிக்கல் அபாயம் இந்த மண்ணுக்கும் இல்லை, உண்ணும் நம் உடலுக்கும் இல்லை.
அந்த அதிசய சிறுதானியங்களில் இன்றும் நம்மோடு பரவலாய் புழக்கத்தில் உள்ள கேழ்வரகு ஒரு சாம்பியன் உணவுதான்!!
எனவே, அரிசியை விட குறைந்த சர்க்கரைச் சத்து, 18 மடங்கு அதிக நார்ச்சத்து உள்ளதால், உண்டபின் இரத்தத்தில் சர்க்கரை அளவை ‘டபுக்’ என ஏற்றாமல், மிக சீராக ஏற்றும் தன்மையுடைய (Low Glycaemic Index Food), நல்ல உணவு ராகி.
இருப்பினும் கூழாய் குடிக்காமல், களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம்.
அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது.
மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.
எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு.
இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது. ‘
பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் என கலவையான அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு.
இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது (Baby Food). 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது.
புதுத் தாயின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்யும் ஓர் உணவு.
இவ்வாறு, 6 மாத குழந்தை முதல் 1200 மாத குழந்தை வரை (100 வயசு தாத்தாவும் குழந்தைதானேங்க!) எளிதில் ஜீரணமாகக் கூடியதும், ஊட்டச்சத்தை அள்ளித் தருவதுமான மிகச் சிறந்த உணவுகளில் ராகியும் உண்டென்றால், அது சூப்பர் ஃபுட் தானே!
அதனால்தான் என்னவோ, நம் வழக்கில் உள்ள இட்லி, தோசை, புட்டு, களி, கஞ்சி, பக்கோடா, இனிப்பு உருண்டை என உணவுகளில் என்னென்ன வகையுள்ளதோ அத்தனையிலும் ராகியை பயன்படுத்துவது மிக நன்மை.
6 மாதம் முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் முறை: கேழ்வரகை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின், தானியத்தை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பஞ்சுத் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும்.
இந்தப் பாலை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி, கூழ் செய்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
கேழ்வரகு ஒவ்வாமை உடைய பெரியவர்களும், இந்த முறையில், ராகியின் பயனை அடையலாம்.
எந்த ஒரு Tin food ஐ விடவும் மிகச் சிறந்த, விலை குறைந்த ஒரு Baby Food!
உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும்.
இது நம் பாரம்பரிய அறிவியல். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம்!!!







